திரைப்பட காட்சிகளை காண்பித்து பெண்ணுக்கு நடந்த அறுவை சிகிச்சை!
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் திரைப்பட நகைச்சுவை காட்சிகளை காண்பித்து பெண்ணொருவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளது வியக்க வைத்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தொண்டங்கி அருகே ஏ.கோட்டப்பள்ளியைச் சேர்ந்த 55 வயது ஆனந்தலட்சுமி என்பவர் மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டு காக்கிநாடா அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து இவரது மூளை கட்டியை அகற்ற மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், குறித்த பெண் அறுவை சிகிச்சை செய்யும் போது நோயாளி விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். இதற்காக நோயாளிக்கு பிடித்தமான நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ‘Adhurs’ திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகளை காண்பித்து, அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.
சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் மேல் அறுவை சிகிச்சை நடந்து முடிந்த நிலையில், இன்னும் 5 நாட்களில் அந்த பெண் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காக்கிநாடா அரசு பொது மருத்துவமனையில் இது போன்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததற்கு அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.