படுக்கை அறை, குளியல் அறையில் ரகசிய கெமரா!
வாடகை வீட்டில் ரகசிய கேமராக்களை பொருத்தியிருந்த வீட்டு உரிமையாளர் மகன் கைது செய்யப்பட்டார்.
கிழக்கு டில்லி ஷகர்பூரில் இளம்பெண் ஒருவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். வெளியூர் செல்லும்போது வீட்டுச் சாவியை, வீட்டு உரிமையாளர் மகன் கரண், 30, என்பவரிடம் கொடுத்து விட்டு செல்வது அவரது வழக்கமாக இருந்துள்ளது.
மீபநாட்களாக தன் ‘வாட்ஸாப்’ செயலியில் சில சந்தேகத்திற்கிடமான தகவல்கள் வந்ததால் சந்தேகம் அடைந்தார். அதாவது, அவரது வாட்ஸாப் கணக்கு வேறு ஒரு லேப்டாப் வழியாக கண்காணிக்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதை அடுத்து, அந்த லேப்டாப் இணைப்பைத் துண்டித்து வீடு முழுவதும் ஆய்வு செய்ததில், குளியலறை பல்பு ஹோல்டரில், ரகசியக் கேமரா பொருத்தப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தார். பிறகு இது தொடர்பாக போலீசில் புகார் செய்தார்.
அதன்படி, போலீஸ் குழு வீடு முழுதும் சல்லடை போட்டு அலசியதில் படுக்கை அறை பல்பு ஹோல்டரிலும் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வெளியூர் செல்லும்போதெல்லாம் அதே கட்டடத்தில் மற்றொரு தளத்தில் வசிக்கும் வீட்டு உரிமையாளர் மகன் கரணிடம் சாவியைக் கொடுத்து விட்டுச் செல்வதை போலீசாரிடம் கூறினார்.
விசாரணையில், மூன்று மாதங்களுக்கு முன் ரகசிய கேமராக்களை படுக்கையறை மற்றும் குளியலறையில் பொருத்தியதை ஒப்புக் கொண்டார். கரண் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை சேமித்து வைத்த இரண்டு லேப் – டாப்களை அவரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட கரண், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாற்றுத் திறனாளியும், பட்டதாரியுமான கரண், ஏழு ஆண்டுகளாக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.