தேர்தலில் நாடு முழுவதிலும் போட்டியிட தீர்மானம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானத்தை கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கை முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவோம்.
இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவும் கட்சியின் வெற்றியை உறுதி செய்யவும் பலமான அணிகளை உருவாக்கி வருகிறோம். மேலும், கட்சியை விட்டு வெளியேறி சென்றவர்களுக்கு எக்காரணம் கொண்டும் வேட்புமனுக்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்கும் போது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் 50 வயதுக்குட்பட்ட இளம் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ளதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.