OOSAI RADIO

Post

Share this post

வாகன இறக்குமதி வருமானமும் அரச ஊழியர்களின் சம்பளமும்!

எமது அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும், வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை அதிகரிக்கவுமே திட்டமிட்டிருந்தது. அதற்கு தேவையான வருமானத்தை வாகன இறக்குமதி மூலம் கிடைக்கப்பெறும் தீர்வை வரி மூலம் பெற திட்டமிடப்படப்பட்டிருந்தது என்று முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த நாட்டை அதில் இருந்து மீட்பதற்கு பாரிய முயற்சிகளை எடுத்துவரும் சந்தர்ப்பத்தில் கல்வி, சுகாதாரம், புகையிரத தொழிற்சங்கங்கள் அடிக்கடி தொழிற்சங்க போராட்டங்களை மேற்கொண்டு வந்தன. அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினை மற்றும் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வுகாண வேண்டும் என்றே அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கைக்கு அமையவே அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளவும் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காணவும் உதய செனவிரத்ன குழு நியமிக்கப்பட்டது. செனவிரத்ன குழுவின் பரிந்துரைக்கமைய அடிப்படை சம்பளத்தில் நூற்றுக்கு 24வீத சம்பள அதிகரிப்புக்கு பரிந்துரை செய்திருந்தது.

அதேபோன்று வாழ்க்கைச்செலவு கொடுப்பனவை 17ஆயிரத்து 800 ரூபாவில் இருந்து 25ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு தேவையான வருமானத்தை வாகன இறக்குமதி மூலம் கிடைக்கப்பெறும் தீர்வை வரி மூலம் பெறவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கைக்கு தொழிற்சங்கங்களும் இணக்கம் தெரிவித்திருந்தன. ஆனால் தற்போது தொழிற்சங்கங்கள் தேவைப்படாது எனவும் தொழிற்சங்கங்களை நீக்குவதாகவும் அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தொழிற்சங்கங்களும் இது தொடர்பில் மெளனமாகவே இருந்து வருகின்றன. அப்படியானால் தொழிற்சங்கங்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளதா என நாங்கள் கேட்கிறோம்.

அதேபோன்று உழைக்கும்போது செலுத்தும் வரியை குறைப்பதாக அரசாங்கம் தெரித்திருக்கிறது. அவ்வாறு அந்த வரியை குறைக்கும்போது அரசாங்கத்தின் வருமானம் குறைகிறது. அந்த வருமானத்துக்கான வழி என்ன என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

அத்துடன் பொருட்களுக்கான வட் வரியை குறைப்பதாகவும் தெரிவித்தார்கள். அரசாங்கத்துக்கு வருமானம் கிடைக்கும் பிரதான வழியே இந்த வரிகள். சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டின் பிரகாரம் வரிகளை குறைக்கும்போது குறையும் வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வழியை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைக்கு அமைய 2028ஆம் ஆண்டு நாங்கள் மீண்டும் கடன் செலுத்துவதற்கு முடியுமான வகையில் எமது பொருளாதார அபிவிருத்தி அடைய வேண்டும். தற்போதைய வருமானத்தின் பிரகாரம் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கு ஒரு வீதத்துக்கும் அதிகம் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு இருக்கும்போது வருமானத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன? அதேபோன்று தற்போது கிடைக்கும் வருமானம் குறையும் வகையில் அரசாங்கம் வரி குறைப்புகளை மேற்கொண்டால் அந்த வருமானத்தை எவ்வாறு ஈட்டிக்கொள்வது என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

அதனால் அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதேநேரம் அதற்கான வருமானத்துக்கும் வழியை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் நெருக்கடி நிலையே ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter