இலங்கைக்கு வர மறுக்கும் பசில்!
முன்னாள் அமைச்சரும், பொதுஜன பெரமுண கட்சியின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச, தற்போதைய நிலையில் இலங்கைக்கு திரும்பி வரும் உத்தேசத்தில் இல்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் அமெரிக்கா பறந்த பசில் ராஜபக்ச, பாராளுமன்றத் தேர்தலின்போதுகூட நாடு திரும்பவில்லை.
இந்நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை வழிநடத்த பசில் வரவேண்டும் எனக் கட்சியின் செயற்பட்டாளர்கள் சிலர் வலியுறுத்தி இருந்தாலும், அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பும் எண்ணம் இல்லை என்று பசில் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ச இலங்கை திரும்பி வரும் பட்சத்தில் கடந்த நல்லாட்சிக் காலத்தில் போன்று வழக்குகளில் சிக்கி, சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்ற அச்சம் காரணமாக தற்போதைக்கு அவர் இலங்கை திரும்பும் உத்தேசத்தில் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.