எச்சரிக்கை – புற்றுநோயின் தாக்கம் அதிகரிக்கும்!
எதிரவரும் 2030 ஆம் ஆண்டளவில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளதாக சுகாதார செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதய நோயினால் இறப்பவர்களை விட புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாத்தறை கம்புருகமுவ புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட “அபேக்ஷா பியச” புற்று நோயாளர் சிகிச்சை பிரிவு திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார செயலாளர் நிபுணர் பாலித மஹிபால,
“புற்று நோயாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் நோய்த்தடுப்பு துறையை வலுப்படுத்துவது போன்று சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவது மிகவும் அவசியம்.
இதன்படி நோய் தடுப்பு பிரிவில் நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிதல், தடுப்பு, உணவு முறை மாற்றங்கள், உடற்பயிற்சி என பல திட்டங்கள் இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
அதற்காக தற்போதைய பணிகளை வலுப்படுத்த வேண்டும். மேலும், உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பெரும்பாலான இறப்புகள் இதய நோயால் ஏற்படுகின்றன.
எனினும் 2030ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் இறப்புகள் இதய நோயை மிஞ்சும் என்றும் சுகாதார அமைப்பு கூறுகிறது.
இந்நிலையில், மருந்துகளுக்கு மாத்திரம் 180 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மக்களின் பணத்தை முறையாக முகாமைத்துவம் செய்து தரமான மருந்துகளை வழங்குவது பொறுப்பும் கடமையுமாகும்.” என்றார்.