கனேடிய விசாவில் மாற்றம்!
கனடாவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா காலம் இரண்டு ஆண்டுகள் என கனடா அரசு நிர்ணயித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர், “கனடாவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ம் ஆண்டு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்வி விசாக்கள் வழங்கப்பட்டன.
2023 ம் ஆண்டு 5.60 லட்சம் மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 35 சதவீதம் அளவுக்கு மாணவர் விசாக்களை குறைக்க முடிவெடுத்துள்ளோம்.
இதனால் இந்த ஆண்டு 3.64 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே விசாக்கள் வழங்கப்படும். இரண்டு ஆண்டுகள் வரை மட்டும் அந்த விசா செல்லுபடியாகும்” என தெரிவித்தார்.
மேலும், கனடாவில் தங்குவதற்கு வீடுகள் கிடைப்பதில் மாணவர்கள் பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர். கனடா வரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வதே இந்த பிரச்சினைக்குக் காரணம்.
இதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடா அரசு எடுத்துள்ள இந்த முடிவுக்கு மற்றொரு காரணமும் இருக்கிறது என தெரிவித்த மார்க் மில்லர், சில கல்வி நிறுவனங்களில் சேர்ந்தால் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும், நிரந்தர கனடா வாசியாக மாற முடியும் என்றெல்லாம் போலியான விளம்பரங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதைக் கட்டுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கனடா அரசின் இந்த முடிவினால் இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.