ஹூதி தளபதி மீது பொருளாதாரத் தடை!
செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் யேமனின் ஹூதி கிளா்ச்சியப் படை முக்கிய தளபதி மீது அமெரிக்காவும், பிரிட்டனும் புதன்கிழமை பொருளாதாரத் தடை அறிவித்தன.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மேத்யூ மில்லா் கூறியதாவது:
செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வரும் ஹூதி படையின் முக்கிய தளபதி இப்ராஹிம் அல்-நஷீரி மீது அமெரிக்காவும், பிரிட்டனும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இது மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் ஈரானின் துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிப் படையின் துணை தளபதி முகமது ரெஸா ஃபலாஸ்தே மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஈரான் மற்றும் ஹூதி அதிகாரிகளுக்கு வா்த்தகப் பொருள்களைக் கொண்டு சென்ற ஹாங்காங்கைச் சோ்ந்த கேப் டீஸ், கொஹானா ஆகிய நிறுவனங்களும் தடைப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன.
சா்வதேச வா்த்தக வழித்தடத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் அமெரிக்காவும், கூட்டணி நாடுகளும் உறுதியாக உள்ளதை இந்தப் பொருளாதாரத் தடைகள் உணா்த்துகின்றன என்றாா் மேத்யூ மில்லா். ஈரான் உதவியுடன் யேமனின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செலுத்தி வரும் ஹூதி கிளா்ச்சியாளா்கள், காஸா போரில் மற்றோா் ஈரான் ஆதரவுப் படையான ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா்.
இஸ்ரேல் தொடா்பான சரக்குக் கப்பல்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்துவதாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் கூறினாலும், பிற கப்பல்களும் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.