வெற்றி – சுருண்டது நியூஸிலாந்து!
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அவுஸ்திரேலியா 172 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது. இதன் மூலம், 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் அந்த அணி முன்னிலை பெற்றது.
வெலிங்டனில் கடந்த மாதம் 29 ஆம் திகதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பந்துவீச்சை தோ்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அஸ்திரேலியா, 115.1 ஓவா்களில் 383 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. கேமரூன் கிரீன் 174 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருக்க, நியூஸிலாந்து பௌலிங்கில் மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.
பின்னா் தனது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து, 43.1 ஓவா்களில் 179 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. கிளென் ஃபிலிப்ஸ் 71 ஓட்டங்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருக்க, அவுஸ்திரேலிய பௌலிங்கில் நேதன் லயன் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
இதை அடுத்து 194 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்ஸை ஆடிய அவுஸ்திரேலியா, 51.1 ஓவா்களில் 164 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. நேதன் லயன் 41 ஓட்டங்கள் அடித்திருக்க, நியூஸிலாந்து தரப்பில் கிளென் ஃபிலிப்ஸ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
இறுதியாக, 369 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய நியூஸிலாந்து, சனிக்கிழமை முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ஓட்டங்கள் சோ்த்திருந்தது. 4 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ரச்சின் ரவீந்திரா 8 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 59 ஓட்டங்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருக்க, டாம் பிளண்டெல் 0, கிளென் ஃபிலிப்ஸ் 1, ஸ்காட் குகெலெஜின் 26, மாட் ஹென்றி 14, கேப்டன் டிம் சௌதி 7, டேரில் மிட்செல் 38 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனா்.
இதனால், 64.4 ஓவா்களில் 196 ஓட்டங்களுக்கு சுருண்டது நியூஸிலாந்து. அவுஸ்திரேலிய பௌலிங்கில் நேதன் லயன் 6, ஜோஷ் ஹேஸில்வுட் 2, டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.