OOSAI RADIO

Post

Share this post

கட்டுநாயக்காவில் தொடரும் வீசா சர்ச்சை!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் வீசாக்களின் முக்கிய தொழில்நுட்ப பங்காளியாக வி.எப்.எஸ் குளோபல் அமைப்பை இணைத்தமை தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

தேசிய பாதுகாப்பு மீதான அச்சுறுத்தல் மற்றும் நாட்டின் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையில் வெளிநாட்டினரிடமிருந்து அதிகரித்த கட்டணங்கள் என்பனவே இதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

முன்னதாக உள்ளூர் நிறுவனமான மொபிடெலின் உதவியுடன் குறைந்த கட்டணத்தில் அமைப்பை உருவாக்கி, சிக்கனமான விகிதத்தில் இலங்கை குடிவரவுத்துறை எந்த சிரமமும் இல்லாது இந்த பணியை கிரமமாக கையாண்டு வந்தது.

இந்நிலையில் மேலும், 150இற்கும் மேற்பட்ட நாடுகளில் வீசா ஆவணங்களை கையாளும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸினால் (Tiran Alies) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த முழுப் பிரச்சினையின் பின்னணியில் சில மறைமுக நிகழ்ச்சி நிரல் இருப்பதாக தாங்கள் சந்தேகிப்பதோடு அதை விரிவாக ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பிரஜைகளின் தனிப்பட்ட விபரங்களை குறித்த வெளிநாட்டு நிறுவனம் வைத்திருப்பதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

அதேநேரம், சுற்றுலாப்பயணிகளாக வரும் வெளிநாட்டு பிரஜைகளின் தனிப்பட்ட பின்னணியை இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளால் முழுமையாக மதிப்பிட முடியாததால், அதுவும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்றும குடிவரவு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், இலங்கை குடிவரவு அதிகாரிகள், வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து வீசா கட்டணத்தை மட்டுமே வசூலித்து வந்துள்ளனர்.

ஆனால் செயல்முறை அவுட்சோர்ஸ் (மூன்றாம் தரப்பு) செய்யப்பட்ட பிறகு கூடுதல் சேவைக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால், வருகை தரும் வீசா கட்டணம் 100 டொலர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அதிகரித்த கட்டணங்கள் சுற்றுலாத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இருப்பினும், பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் உள்ளூர் நிறுவனத்தின் முன்மொழிவைக் கண்டுகொள்ளாமல், ‘GBS டெக்னொலஜி சேர்வீசஸ்’ மற்றும் ‘IVS Global FZCO’ ஆகிய நிறுவனங்களுக்கு இந்த சேவையை வழங்கியுள்ளது.

புதிய இணைய வீசா தளத்தை செயற்படுத்துவதற்கான தொழில்நுட்ப பங்காளியாக வி.எப்.எஸ் குளோபல் உள்ளது. இதன்படி ஏப்ரல் 17 முதல், இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளும் வீசா கட்டணங்களுக்கு மேலதிகமாக 18.5 டொலர்கள் சேவைக் கட்டணம் மற்றும் 7.27 டொலர்கள் வசதிக் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளனர்.

Courtesy: Sivaa Mayuri

Leave a comment

Type and hit enter