ரணில் – சஜித் ஒன்றிணைவு?
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் ஒன்றிணைப்பதற்கு எந்தவொரு வெளிநாடும் முற்படவில்லை. ஜனாதிபதி சஜித், பிரதமர் ரணில் என்ற கோரிக்கைக்குக்கூட நாம் உடன்படப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, “ரணில், சஜித் இணைய வேண்டும் எனக் கட்சியில் உள்ள ஓரிருவரே பரிந்துரைக்கின்றனர்.
ஆனால், அவருடன் இணைவதற்கு எமது கட்சிக்கு எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது. கட்சியில் உள்ள 95 சதவீதமான உறுப்பினர்கள் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளனர்.
சஜித் பிரேமதாஸவும் இந்த விடயத்தில் உறுதியாக உள்ளார். இரு தரப்பையும் இணைப்பதற்கு வெளிநாடொன்று முற்படுகின்றது என்ற கருத்தையும் நான் ஏற்கவில்லை. எமது கட்சியை வெளிநாடு வழிநடத்த முடியாது.
சஜித் ஜனாதிபதி, ரணில் பிரதமர் என்ற கோரிக்கை தொடர்பில் நாம் எந்தவொரு தரப்புடனும் கலந்துரையாடவில்லை. அதற்கான தேவைப்பாடும் கிடையாது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் 75 இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறுவார்”என கூறியுள்ளார்.