பிரதோஷவ நாளில் சிவனின் அருள் கிடைக்க!
சிவ பெருமானின் அருளை பெறுவதற்காக இருக்கப்படும் முக்கியமான விரதங்களில் பிரதோஷ விரதமும் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும் வரும் திரியோதமி திதியில் மாலையில், சிவனுக்கு நடைபெறும் பூஜையே பிரதோஷ பூஜை எனப்படுகிறது.
வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு பிரதோஷங்கள் வருவதுண்டு. இந்த ஆண்டு ஜூலை மாத பிரதோஷம் ஜூலை 03ம் திகதி புதன்கிழமை வந்துள்ளது. இந்த பிரதோசமானது தேய்பிறையில் வரும் கிருஷ்ணபட்ச பிரதோஷமாகும்.
முற்பிறவி கர்மாக்களால் தொடரும் பாவங்கள், துன்பங்கள் ஆகியவற்றை நீக்கும் விரதத்திற்கு பிரதோஷ விரதம் என்று பெயர். இரவின் ஆரம்பம், மாலையுடன் தொடர்புடையது ஆகியனவும் பிரதோஷத்தை குறிப்பதாக சொல்லப்படுகிறது.
திரியோதசி திதியில் சூரியன் மறைவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முந்தைய காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். இது சிவ வழிபாட்டிற்குரிய காலமாகும். மகிழ்ச்சி, மனநிறைவு ஆகியவற்றுடன் சிவ பெருமானின் அருளையும் தந்து, இறுதியில் முக்தியையும் தரக் கூடியது பிரதோஷ விரதமாகும்.
விரதம் எடுக்கும் முறை
பிரதோஷத்தன்று சிவ பெருமான், பார்வதி, விநாயகர் மற்றும் நந்தியை வழிபட வேண்டும். பால், தண்ணீர் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். ஒரு கலத்தில் தண்ணீர் நிரப்பி, அதன் மீது அருகம்புற்களை பரப்பி, அதன் மீது தாமரை பூவை படைத்து வழிபட வேண்டும். மலர்கள், வெற்றிலை பாக்கு, காசு, அரிசி போன்றவற்றை சிவ பெருமானுக்கு படைத்து வழிபட வேண்டும்.
ஒரு விளக்கேற்றி வைத்து, சிவனின் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமான மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி செய்வதால் சிவ பெருமானின் அருள் முழுவதுமாக கிடைக்கும்.
கிடைக்கும் பலன்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத்
மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் நோய்கள் குணமாகும், தீய சக்திகள் எதுவும் நெருங்காது, சிவனின் அருள் கிடைக்கும், மன அமைதி அடையும். மரணத்தில் இருந்த பாதுகாக்கும். துன்பம், மனஅழுத்தம் ஆகியவற்றை நீக்கும். ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த வேளையில் தொடர்ந்து உச்சரித்து வந்தால் அதன் பலன் பல மடங்காக கிடைக்கும்.
இந்த மந்திரத்தை உடல்நலம் பாதிக்கப்பட்டவரின் அருகில் அமர்ந்து தொடர்ந்து சொல்லி வந்தால், மரணப்படுக்கையில் இருந்தும் மீண்டு வர முடியும். அகால மரணம், விபத்து ஆகியவற்றில் இருந்து நம்மை காக்கும் தன்மை கொண்டது இந்த மந்திரம். இறைவனை முழுவதுமாக சரணடைவதே இந்த மந்திரத்தின் பொருளாகும்.