OOSAI RADIO

Post

Share this post

அதிகரிக்கப்படவுள்ள இலங்கையர்களின் வருமானம்!

இன்னும் சிறிது காலத்தின் பின்னர் பொருட்களின் விலையேற்றத்திற்கு ஏற்றவாறு பொதுமக்களின் வருமானம் அதிகரிக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மக்கள் பொறுமையாக இருந்தால் நிம்மதி தரும் மாற்றம் அவர்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து கருத்து வெளியிட்ட மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் குறிப்பிடுகையில்,

இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அதற்கு ஏற்ற வகையில் நாட்டு மக்களின் வருமானம் இன்னமும் அதிகரிக்கவில்லை.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் போது உணரப்படும் வேதனை நிறைந்த நிலை இன்னமும் இருக்கின்றது. இது ஓரளவுக்கு இலகு படுத்தப்பட்டதே தவிர முழுமையாகக் குறைந்துவிடவில்லை.

இதன் நேர்மறையான பிரதிபலன்கள் கிடைப்பதற்கு சில காலம் எடுக்கும். பணவீக்கம் 6 வீதமாகக் குறைந்த போதிலும் பொருளாதாரம் 6 வீதத்துக்கு இன்னமும் வளர்ச்சியடையவில்லை.

மக்களின் வருமானம், பொருட்களின் விலை ஏற்றத்துக்கு ஏற்ற வகையில் அதிகரிக்க வேண்டும். அதற்கு சில காலம் எடுக்கும். அதன் பின்னரே பொருட்களின் விலையேற்றத்திற்கு ஏற்றவாறான வருமானம் மக்களுக்கு கிடைக்கும்.

கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு இயல்புநிலை ஏற்பட அவகாசம் தேவை. இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை. இதே பாதையில் பயணிக்க வேண்டுமானால் அந்தப் பாதையில்தான் செல்ல வேண்டும். மாறினால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும்.

வலி மிகுந்ததாக இருந்தாலும், முடிவுகள் நீண்ட காலம் நீடிக்கும். இதற்கு சிறிது காலம் எடுக்கும். மக்கள் பொறுமையாக இருந்தால் அந்த நிம்மதி அவர்களுக்குக் கிடைக்கும்.

இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளான நாடுகள் பல ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அதிலிருந்து மீளவில்லை. நாம் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குள் அந்தப் பாதையில் பயணித்துள்ளோம். அந்த நிலையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter