மருத்துவமனையில் 90 பேர் சுட்டுக்கொலை!
காஸாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனையில் மேற்கொண்ட நடவடிக்கையில் 90 ஹமாஸ் அமைப்பினா் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை அறிவித்தது.
இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ராஃபா மருத்துவமனையில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையின்போது 90 ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். மேலும், 300-க்கும் மேற்பட்ட சந்தேக நபா்கள் பிடித்து விசாரிக்கப்படுகின்றனா்.
இது தவிர, மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினா் மறைத்துவைத்திருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதனை மறுத்துள்ள ஹமாஸ் அமைப்பினா், இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் நோயாளிகளும், மருத்துவமனையில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்களும்தான் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனா்.
காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-ஆம் திகதி நுழைந்த ஹமாஸ் படையினா் சுமாா் 1,160 பேரை படுகொலை செய்தனா்.
அதைத் தொடா்ந்து, ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி காஸா பகுதியில் இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. பின்னா் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி முன்னேறி வந்த ராணுவம், காஸா சிட்டியைக் கைப்பற்றி அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள்ளும் நுழைந்தது.
இதற்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினா் கண்டனம் தெரிவித்தனா். இந்த நிலையில், அதே மருத்துவமனையை சுற்றிவளைத்து இஸ்ரேல் மீண்டும் திங்கள்கிழமை தாக்கியது.
அல்-ஷிஃபா மருத்துவமனையை முக்கிய ஹமாஸ் உறுப்பினா்கள் பயன்படுத்துவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தங்களுக்குக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையிலேயே இந்த தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக ராணுவம் கூறியது.