குழந்தைகளோடு கிணற்றில் பலியான தாய்!
நீச்சல் பழகிய 2 குழந்தைகளுடன் தாயும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
வேலூர், பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் (40), பவித்ரா (30) தம்பதி. இவர்களுக்கு ரித்திக் (9) என்ற மகனும், நித்திகா ஸ்ரீ (7) என்ற மகளும் இருந்தனர்.
இந்நிலையில் குழந்தைகள் கோடை விடுமுறையால் வீட்டில் இருந்துள்ளனர். எனவே, பவித்ரா தினமும் இருவரையும் அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் கற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதன்படி, பவித்ரா, தனது இரு பிள்ளைகளுடன் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கியுள்ளனர்.
கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே விரைந்த போலீஸார், தீயணைப்புத் துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.