OOSAI RADIO

Post

Share this post

அட்சய திருதியை என்றால் என்ன? அட்சய திருதியை என்ன செய்ய வேண்டும்?

இந்த ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11 ஆம் திகதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும்.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். எல்லா நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நாளன்று, தானங்கள் செய்து புண்ணியத்தைப் பெறுவது மிகவும் சிறப்பு.

அட்சய திருதியை நாளில் என்னென்ன செய்ய வேண்டும்:

அட்சய திருதியை அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிட வேண்டும். அதன்மேல் வாழையிலை ஒன்றினை வைத்து இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். கலசத்தின் அருகே ஒரு படியில் நெல் நிறைத்து வைக்க வேண்டும்.

அதன் பின் கலசத்திற்குப் பொட்டு, பூ வைத்து லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதற்கும் பொட்டு, பூ வைத்து குத்துவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அத்துடன் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வைக்க வேண்டும். அந்தப் பொருள் விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இப்படி செய்வதால் அஷ்டலட்சுமி உங்கள் இல்லம் தேடி வருவாள் என்பது நம்பிக்கை.

கோவிலுக்குச் செல்வது நல்லது. அதன் பிறகு முழு முதற்கடவுளான பிள்ளையாரை வணங்க வேண்டும். அப்போது உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லி வணங்குவது மிகவும் சிறப்பு. அன்றைய தினம் மாலையில் அருகில் உள்ள சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் வீட்டிற்கு வந்து மீண்டும் தீப ஆராதனையை கலசத்துக்குச் செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வைக்க வேண்டும். கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம்.

விரதம் இருக்கும் முறை:

அட்சய திருதியை அன்று உணவு உண்ணாமல் விரதம் இருப்பது, எளிய திரவ ஆகாரம் மட்டும் எடுத்துக்கொளவது என்பது அவரவர் உடல் நலத்தைப் பொறுத்தது. உண்ணா விரதம் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.

அட்சய திருதியை அன்று என்ன வாங்க வேண்டும்:

தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்றும், தங்கம் வாங்கினால்தான் தங்கும். அது மென்மேலும் பெருகும் என்பதில்லை. அன்றைய தினம் என்ன வாங்கினாலும் அது பல மடங்கு பெருகும் என்பதுதான் நம்பிக்கை. அன்றைய தினம் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர்.

ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். உப்பு, அரிசி மற்றும் தேவையான ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என எதை வேண்டுமானாலும் வாங்கலாம். பெண் பார்ப்பது, நிச்சயதார்த்தம் போன்ற சுபகாரியங்களை இந்தநாளில் செய்வது நல்லது.

தானம் செய்ய வேண்டும்:

அட்சய திருதியை அன்று வஸ்திர தானம் செய்வது நல்லது. அன்னதானம் கொடுப்பதும் சிறப்பு. அத்துடன் அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கொடுக்க வேண்டும். அதனால் அட்சய திருதியை அள்ள, அள்ள குறையாமல் புண்ணிய செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாள் என்று நம்பப்படுகிறது. காசாக கொடுக்கக்கூடாது. அவர்களுடைய தேவை என்னவோ அதை பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்கிக் கொடுப்பது நல்லது.

Leave a comment

Type and hit enter