இலங்கையில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்
இலங்கை நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து, கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை மருத்துவரான தீபால் பெரேரா கவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் பிறப்பு விகிதம் கணிசமான சரிவைக் கண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்தப் போக்கு நாட்டின் எதிர்காலத்திற்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளைக் கவனித்ததில் நாட்டில் பிறப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2013ஆம் ஆண்டில், 350,000 பிறப்புகள் நிகழ்ந்தன. 2024 ஆம் ஆண்டில், அந்த எண்ணிக்கை 228,000 ஆகக் குறைந்துள்ளது.
அத்துடன், தற்போது குழந்தைகளில் பலர் பல்வேறு நோய்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள், இது 20 ஆண்டுகளுக்கு முன்னர், காணாத ஒரு சூழ்நிலை என்று தீபால் பெரேரா கூறியுள்ளார்.
அதேநேரம், குழந்தை பருவ நீரிழிவு, புற்றுநோய் மற்றும் மனநல கோளாறுகள் அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குழந்தைகள் இந்த விகிதத்தில் நோய்வாய்ப்பட்டால், எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாக இருக்காது என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தாவிட்டால், நாட்டில் அனைவரும் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை மருத்துவரான தீபால் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.