67 நாடுகளுக்கு இலவச வீசா!
67 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச வீசா வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஏழு நாடுகளுக்கு இலவச வீசா வழங்கப்படுகின்றது. இந்த ஏப்ரல் மாதத்தின் 25ம் திகதி வரையில் 121500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.
ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் ஏழு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யூடியூப் ஊடாக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் போதிலும் சில சுற்றுலாப் பயணிகள் துன்புறுத்தல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒடிசி தொடருந்து கண்டியிலிருந்து எல்ல வரையிலான பயணத்திற்கு 3000 ரூபா அறவீடு செய்யப்பட்ட போதிலும் சில தொடருந்து திணைக்கள அதிகாரிகள் 8000 ரூபா வரையில் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து அறவீடு செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
45 இடங்கள் சுற்றுலா பிராந்தியங்களாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பின்னவல யானைகள் சரணாலயம், சீகிரியா போன்ற சுற்றுலா பகுதிகள் வேறும் அமைச்சுக்களின் கீழ் இயங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவற்றை சுற்றலா அமைச்சின் கீழ் கண்காணிப்பதற்கு முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.