20 வருடங்களுக்கு பின் சூரியப் புயல்! (Video)
இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் ஏற்பட்ட சூரிய காந்த புயலின் விளைவால் பூமியின் வடக்குப் பகுதியில் அரோரா பொரியாலிஸ் (Aurora Borealis) எனப்படும் கதிரொளி தென்பட்டுள்ளது.
வானில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை காணும் வாய்ப்பினை பூமியின் வடக்குப் பகுதி மக்கள் பெற்றுள்ளனர்.
குறித்த வானிலை மாற்றமானது, சூரியனில் இருந்து வெளிவரும் பலத்த கதிர் கசிவினால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது, ஐரோப்பிய நாடுகளில் வானம் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆய்வுக்குழுவினர், இது சுமார் 21 ஆண்டுகளுக்கு பின்னர் பூமியைத் தாக்கியுள்ள வலுவான புவி காந்த புயல் எனவும் இது ஐந்தாவது அல்லது ஜி5 (G5) நிலை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இதன் தாக்கத்தின் காரணமாக பூமியின் வடக்கு பகுதிகளுக்கு அப்பால் உள்ள உலகளாவிய மின் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புக்கள் கூடுதலாக பாதிப்புக்குள்ளாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக மின் தடை, கையடக்கத்தொலைபேசிக்கன இணைய செயலிழப்பு, வானொலி அலைகள் செயலிழப்பு மற்றும் செயற்கைக்கோள்களின் செயற்பாட்டில் பாதிப்பு போன்ற பேரழிவுகளும் ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2003ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதுபோன்று பூமியை தாக்கிய சூரியப் புயலினால் ஸ்வீடன் மற்றும் தென்னாப்பிரிக்காவில் மின் அமைப்புகள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.