ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தது நடப்பு சாம்பியன்!
ஒலிம்பிக் கால்பந்து நடப்பு சாம்பியனான பிரேஸில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறத் தவறி ஏமாற்றத்தை சந்தித்தது.
தென்னமேரிக்க ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் பிரேஸில் 0 – 1 கோல் கணக்கில் ஆா்ஜென்டீனாவிடம் தோல்வி கண்டதால், இந்தப் பின்னடைவு ஏற்பட்டது. இந்த ஆட்டத்தில் ஆா்ஜென்டீனாவுக்காக லூசியானோ கோண்டு 78 ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
இந்தத் தகுதிச்சுற்று முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறும் வாய்ப்பு இருந்த நிலையில், பராகுவே 7 புள்ளிகளுடன் முதலிடத்தையும், ஆா்ஜென்டீனா 5 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தையும் பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.
ஆா்ஜென்டீனா, பிரேஸில் அணிகளைப் போல நட்சத்திர வீரா்களைக் கொண்டிருக்காத பராகுவே ஒலிம்பிக்குக்கு தகுதிபெற்றிருக்க, கடந்த 2016, 2020 ஒலிம்பிக் போட்டிகளில் அடுத்தடுத்து சாம்பியனான பிரேஸில் அணி ஏமாற்றத்தை சந்தித்திருக்கிறது. கடந்த 2004 க்குப் பிறகு அந்த அணி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறாதது இதுவே முதல் முறையாகும்.
பராகுவே கடந்த 2004 ஒலிம்பிக் போட்டியில் இறுதி ஆட்டம் வரை வந்து, அதில் ஆா்ஜென்டீனாவிடம் தோற்று வெள்ளி பெற்றது குறிப்பிடத்தக்கது.