வெங்காயம் மற்றும் அரிசி ஏற்றுமதி – அரசு அனுமதி!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு 64,400 தொன் வெங்காயத்தை தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (என்சிஇஎல்) மூலம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
விலைவாசி உயா்வை கட்டுப்படுத்தும் வகையில் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளபோதும், நட்பு நாடுகளுக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்து வருகிறது.
உள்நாட்டில் வெங்காய இருப்பை உறுதி செய்யும் வகையில் வரும் 31 ஆம் திகதி வரை ஏற்றுமதிக்கு தடை விதித்து கடந்த ஆண்டு டிசம்பா் 8 ஆம் திகதி மத்திய அரசு உத்தரவிட்டது.
அதுபோல, விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசின் கையிருப்பிலிருந்து விடுவித்து மானிய விலையில் வெங்காய விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பங்களாதேஷூக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இதுகுறித்து வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘பங்களாதேஷூக்கு 50,000 தொன் வெங்காயம் ஏற்றுமதி செய்யவும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 14,400 தொன் வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்த ஏற்றுமதிகள் அனைத்தும் என்சிஇஎல் மூலம் செய்யப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவுக்கு 30,000 தொன் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கும், ஆப்பிரிக்க நாடுகளான திஜிபெளட்டி மற்றும் கைனீ பிஸ்ஸாவ் நாடுகளுக்கு 80,000 நொய் அரிசி ஏற்றுமதிக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்கும் வகையில் கடந்த ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி முதல் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.