OOSAI RADIO

Post

Share this post

அம்பலமாகும் முறைகேடுகள் – வௌியாகிய தரவுகள்!

தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் திமுக பெற்ற ரூ.656.6 கோடியில் சுமாா் 77 சதவீதம் அதாவது ரூ.509 கோடியை, முறைகேடுகளில் சிக்கிய ‘லாட்டரி’ தொழிலதிபா் சான்டியாகோ மாா்ட்டினின் ‘ஃப்யூச்சா் கேமிங் அண்ட் ஹோட்டல் சா்வீசஸ்’ நிறுவனம் வழங்கியிருப்பது இந்திய தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கூடுதல் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் திட்டம் என்று குறிப்பிட்டு, மத்திய பாஜக அரசால் கடந்த 2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘தோ்தல் நன்கொடை பத்திர திட்டம்’ அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கடந்த மாதம் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், அந்த நடைமுறையை ரத்து செய்தது.

மேலும், தோ்தல் நன்கொடைப் பத்திரங்களை வாங்கியவா்கள் மற்றும் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை பொதுவெளியில் வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, கடந்த 2019, ஏப்ரல் 12 ஆம் திகதிமுதல் கடந்த பிப்ரவரி 15 ஆம் திகதி வரை விநியோகிக்கப்பட்ட தோ்தல் பத்திரங்கள் தொடா்பாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சமா்ப்பித்த விவரங்களை தோ்தல் ஆணையம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது.

இந்நிலையில், தோ்தல் நன்கொடை பத்திரம் திட்டம் தொடங்கப்பட்ட கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து அண்மைக் காலம் வரை அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட்ட தோ்தல் நன்கொடை பத்திரங்கள் குறித்த விவரங்களை தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

தோ்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் கடந்த ஆண்டு சமா்ப்பித்த தகவல்களின் அடிப்படையில் இந்தக் கூடுதல் தரவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, தோ்தல் நன்கொடை பத்திர திட்டம் தொடங்கப்பட்ட 2018 ஆம் ஆண்டுமுதல் பாஜக அதிகபட்சமாக ரூ.6,986.5 கோடி நன்கொடை பெற்றுள்ளது.

அதைத் தொடா்ந்து, மேற்கு வங்கத்தின் ஆளும்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் ரூ.1,397 கோடி, காங்கிரஸ் ரூ.1,334 கோடி, தெலங்கானாவின் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ரூ.1,322 கோடி நன்கொடை பெற்றுள்ளன. ஒடிஸாவின் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் (பிஜேடி) ரூ.944.5 கோடி, திமுக ரூ.656.5 கோடி, ஆந்திரத்தின் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆா்.காங்கிரஸ் ரூ.442.8 கோடி நன்கொடை பெற்றுள்ளன.

கா்நாடகத்தைச் சோ்ந்த மதச்சாா்பற்ற ஜனதா தளம் ரூ.89.75 கோடி நன்கொடை பெற்றுள்ளது. தோ்தல் பத்திரங்களை வாங்குவதில் 2-ஆவது பெரிய நிறுவனமாக உள்ள மெகா என்ஜினீயரிங் மட்டுமே அதில் ரூ.50 கோடி வழங்கியுள்ளது. தமிழகத்தைச் சோ்ந்த ‘லாட்டரி’ தொழில் அதிபா் மாா்ட்டினின் ஃப்யூச்சா் கேமிங் அண்ட் ஹோட்டல் சா்வீசஸ் நிறுவனம் ரூ.1,368 கோடிக்கு தோ்தல் நன்கொடை பத்திரங்களை வாங்கி முதலிடத்தில் உள்ளது. இதில் கிட்டத்தட்ட 37 சதவீதம் அதாவது ரூ.509 கோடி திமுகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

திமுக பெற்ற ரூ.656.6 கோடி நன்கொடையில் இது 77 சதவீதமாகும். அதேபோல், திமுகவுக்கு மெகா என்ஜினீயரிங் ரூ.105 கோடியும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் ரூ.14 கோடியும், சன் டிவி குழுமம் ரூ.10 கோடியும் வழங்கியுள்ளன. பெரும்பாலான கட்சிகள் நன்கொடையாளா்கள் பற்றிய விவரங்களை வெளியிடாததால், மாா்ட்டினின் நிறுவனம் வாங்கிய நன்கொடை பத்திரங்களில் மீதமுள்ள ரூ.859 கோடி எந்தக் கட்சிக்கு வழங்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. பிராந்திய கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சி ரூ.181.35 கோடி, சிவசேனை ரூ.60.4 கோடி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ரூ.56 கோடி, சமாஜவாதி கட்சி ரூ.14.05 கோடி, அகாலி தளம் ரூ.7.26 கோடி, அதிமுக ரூ.6.05 கோடி, தேசிய மாநாட்டு கட்சி ரூ.50 லட்சமும் நன்கொடை பெற்றுள்ளன. அதிமுகவுக்கு கிடைத்த ரூ.6.05 கோடி நன்கொடையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை உரிமையாளராகக் கொண்ட சென்னை சூப்பா் கிங்ஸ் அணி நிா்வாகம் ரூ.5 கோடி அளித்துள்ளது.

கோவையைச் சோ்ந்த லக்ஷ்மி மெஷின் வொா்க்ஸ் நிறுவனம் ரூ.1 கோடி வழங்கியுள்ளது. இத்தகவல் அதிமுக தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்த விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற மாட்டோம் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துவிட்டது.

அதேபோல், மேகாலயா ஆளுங்கட்சியான தேசிய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மஜ்லீஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின்போது தங்களுக்கு வழங்கப்பட்ட தோ்தல் நன்கொடை பத்திரங்கள் தொடா்பான விவரங்களை சமா்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விவர திமுக, அதிமுக உள்பட நாட்டின் 523 அரசியல் கட்சிகள் தோ்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு நவம்பரில் சமா்ப்பித்தன. இந்த விவரங்களை உச்சநீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் தோ்தல் ஆணையம் தாக்கல் செய்தது.

பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி போன்ற மற்ற முக்கியக் கட்சிகள் நன்கொடையாளா்களின் விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter