போலி பேஸ்புக் கணக்குகளுக்கு ஆப்பு!
பேஸ்புக் செயலியில் தங்களின் பெயரில் இயங்கும் போலி பேஸ்புக் கணக்குகளை நீக்கக் கோரி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நாளாந்தம் சுமார் 200 க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தர்ஷிகா குமாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
“கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பேஸ்புக்கைத் தொடர்பு கொண்டு, அது தொடர்பான போலிக் கணக்குகளை நீக்கக் கோரியுள்ளனர்.
போலிக் கணக்குகளை அகற்றக் கோரி தினசரி அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் வருவதனால், சில சமயங்களில் முந்தைய கோரிக்கைகளின்படி போலி கணக்குகள் அகற்றப்பட்டதா உறுதிப்படுத்துவதற்கு கூட பேஸ்புக்கில் வாய்ப்பு இல்லை.
அத்துடன், இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் சுமார் 1500 முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் பெண்களும் குழந்தைகளுமே பெரும்பான்மையான முறைப்பாடுகளுக்கு பலியாகி உள்ளனர்” என தர்ஷிகா குமாரி ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.