ஜூலை மாதம் மின் கட்டணம் குறைப்பு!

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாளை (17) வெள்ளிக்கிழமை வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் ஜூலை மாதம் மின் கட்டணம் குறைப்பு சதவீதம் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மே மாதம் முதலாம் திகதி ஆணைக்குழுவிடம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும், மின்சார சபை விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 10ஆம் திகதி வரை காலத்தை நீடிக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது.
எவ்வாறாயினும், கடந்த 10 ஆம் திகதி இலங்கை மின்சார சபை உரிய முன்மொழிவுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும் உரிய முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்ற பின்னர் மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும், ஜூலை மாதம் மின் கட்டணம் குறைப்பு சதவீதம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.