இலங்கையில் உதயமாகும் புதிய அரசியல் கட்சி!
முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, புதிய அரசியல் கட்சி ஒன்றை அங்குரார்ப்பணம் செய்யவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
“நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஊழல் எதிர்ப்பு முன்னணி” என அவர் தனது புதிய அரசியல் கட்சிக்குப் பெயரிட்டுள்ளார்.
இதன் அறிமுக விழா இன்று (18) பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனாதிப விகாரைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அரசியல் பயணம் குறித்து விளக்கமளிக்கும் போதே கட்சி குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பொது மக்கள் என்னைத் தொடர்பு கொள்கின்றனர். நாட்டுக்காக அரசியல் செய்ய முன்வர வேண்டும் என்று அவர்கள் என்னிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ஆம், இந்த நாட்டைக் கட்டியெழுப்பலாம், ஆனால் 2048ம் வருடத்திற்குள், நீங்கள் அனைவரும் இறந்துவிடுவீர்கள், இந்த மக்களை அவர்கள் படும் துன்பங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும், அது விரைவில் நடக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
முக்கியமாக நம் நாட்டிற்கு இந்த நாட்டை கட்டியெழுப்பும் உண்மையான அக்கறை கொண்ட தலைவர் தேவை .
தலைவன் நேர்மையானவராக இருந்தால் யாரும் ஊழலில் ஈடுபட மாட்டார்கள். நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது ஊழலில் ஈடுபட்ட இரண்டு மூன்று பேர் நீக்கப்பட்டனர்.
ஊழல் முறைகேடுகள் இல்லாமல் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு களங்கம் ஏற்படாத வகையில் நான் பணியாற்றினேன்.
நான் அதைச் செய்தபோது, தலைவர்கள் என்னை அகற்றினர். இந்த நாட்டு மக்களுக்கு அவர்களின் தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லை.
உலக முதலீட்டாளர்களுக்கும் நம் நாட்டின் தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லை. உலகில் உள்ள தொண்ணூறு முதலீட்டாளர்கள் ஒரு பில்லியன் டொலர் கொடுத்தால் நம் நாட்டின் கடன் தீர்ந்துவிடும். எனவே நாம் ஒரு திட்டத்துடன் செல்ல வேண்டும், இந்த நாட்டின் ஜனாதிபதி முதலீட்டாளர்களைத் தேடி அவர்களிடம் செல்ல வேண்டும்.
இன்று இந்த நாட்டின் தலைவர்கள் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அச்சம் கொண்டுள்ளார்கள். நாம் அனைவரும் கூட ஏதோ வகையான அச்சத்தைக் கொண்டுள்ளோம். அந்த நிலை மாற வேண்டும்.” என்றார்.