கனடாவில் குடியேற உள்ள சிக்கல்!
கனடா அரசியல்வாதிகளும் மக்களில் ஒரு பகுதியினரும் புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதை எதிர்ப்பதாக ஆய்வுகள் தகவல் வெளியிட்டுள்ளன.
அத்தோடு கனடாவில் ஏற்ப்பட்டுள்ள வீட்டுப் பற்றாக்குறைக்கு புலம்பெயர்ந்தோர் தான் காரணம் என சில அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கனடாவில் புலம்பெயர்தலானது பேசு பொருளாகியுள்ள நிலையில் அரசியல்வாதிகள் புலம்பெயர்தலை எதிர்ப்பதை அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர்வோரை வரவேற்கும் நீங்கள் அதற்கேற்ப வீடுகளைக் கட்டவேண்டாமா என அரசை நோக்கி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. கனடா அரசியல்வாதிகள் மட்டுமின்றி கனடா மக்களில் ஒரு பகுதியினரும் புலம்பெயர்தலுக்கு எதிராக இருப்பது ஆய்வுகளில் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் வெறும் 9 சதவிகித கனேடியர்கள் மட்டுமே பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதை ஆதரிக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
அத்துடன், 43% பேர் இப்போது இருக்கும் எண்ணிக்கையிலேயே புலம்பெயர்வோர் வருகை இருக்குமானால் தங்களுக்குப் பிரச்சினையில்லை என்று கூற 39% பேர் குறைந்த எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வந்தால் போதும் என நினைக்கின்றார்கள்.
அத்துடன், 72% கனேடியர்கள் கனடாவின் மக்கள்தொகை அதிகரிப்பதில் புலம்பெயர்ந்தோரின் பங்கு முக்கியமானது என கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதே எண்ணிக்கையிலானவர்கள், அதாவது 75% கனேடியர்கள் வீடுகள் பற்றாக்குறை பிரச்சினைக்கு புலம்பெயர்ந்தோர் தான் காரணம் என்றும், 73% கனேடியர்கள் கனடாவின் மருத்துவ அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதற்கு புலம்பெயர்ந்தோர் காரணம் என்றும் கருதுகின்றனர்.
63% கனேடியர்கள் பள்ளிகளில் கனேடிய மாணவர்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவதற்கு புலம்பெயர்ந்தோர் காரணம் என்றும் கருதுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.