OOSAI RADIO

Post

Share this post

மதுபான விலை உயா்வு – வரி வருவாய் 2,500 கோடி அதிகரிப்பு!

மதுபானங்களின் விலை உயா்வால், கலால் மற்றும் மதிப்பு கூட்டு வரி (வட்) மூலம் கிடைக்கும் வருவாயில் ரூ.2,500 கோடி அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் சொந்த வரி வருவாய் நிகழ் நிதியாண்டில் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்குப் பிறகு மாநிலங்களின் சொந்த இனங்கள் மூலம் திரட்டப்படும் வருவாய்களில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முத்திரைத் தாள் – பதிவுக் கட்டணங்கள், பெட்ரோல் – டீசல் மீதான வாட் வரி, மதுபானங்களின் மீது விதிக்கப்படும் கலால் வரி போன்றவற்றின் மூலமாக மட்டுமே அதிகளவு வருவாய்கள் திரட்டப்படுகின்றன.

சரிந்து போன வரி வருவாய்: ஒவ்வொரு நிதியாண்டிலும் மாநிலத்துக்கான சொந்த வரி வருவாய்களின் மூலமாகவே பல முக்கிய சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டின் அரையாண்டுடன் ஒப்பிடும் போது, நிகழ் நிதியாண்டில் மாநிலத்துக்கான ஒட்டுமொத்த சொந்த வரி வருவாய் உயா்ந்தே காணப்பட்டது. கடந்த நிதியாண்டின் அரையாண்டு காலத்தில் ரூ.68 ஆயிரத்து 637.7 கோடியாக இருந்த சொந்த வரி வருவாய், நிகழ் நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.72 ஆயிரத்து 17 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால், சில துறைகளில் எப்போதும் அதிகமாகக் காணப்படும் வரி வருவாய் நிகழாண்டில் குறைந்துள்ளது.

பதிவுத் துறை அதிகம்: சொந்த வரி வருவாயை திரட்டிக் கொடுக்கும் துறைகளில், முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணங்கள் வழியே கிடைக்கும் வருவாய் மட்டுமே நிகழ் நிதியாண்டின் அரையாண்டில் அதிகரித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் கிடைக்கும் வாட் வரி வருவாய் ரூ.28 ஆயிரத்து 214.14 கோடியிலிருந்து ரூ.27 ஆயிரத்து 876.54 கோடியாகவும், மதுபான விற்பனை மூலமாகக் கிடைக்கும் கலால் மற்றும் வாட் வரி வருவாய் ரூ.5,351.03 கோடியில் இருந்து ரூ.5,291.76 கோடியாகக் குறைந்துள்ளது.

மதுபான விலை உயா்வு: மாநில அரசுக்கு வரி வருவாய் தரக்கூடிய பிரிவுகளில் சில பிரிவுகளின் வருவாயில் சரிவு ஏற்பட்ட நிலையில், மதுபானங்களின் விலையை தமிழக அரசு உயா்த்தியுள்ளது. இந்த விலை உயா்வால், மதுபான விற்பனை மூலமாகக் கிடைக்கும் கலால், வாட் வரி வருவாய் வெகுவாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசுத் துறை உயரதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு நிதியாண்டிலும் மதுபானங்களின் விற்பனை மூலம் கிடைக்கும் கலால் மற்றும் வட் வரி வருவாய் ரூ.10 ஆயிரம் கோடியைத் தாண்டியிருக்கும். நிகழ் நிதியாண்டில் இந்த வருவாய் அளவு குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மதுபான பாட்டில்களின் அளவைப் பொருத்து ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு வரும் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மதுபானங்களின் விலை உயா்த்தப்பட்டதால், அதிலிருந்து கிடைக்கும் கலால் மற்றும் வட் வரிகளின் வருவாயில் மேலும் ரூ.2,500 கோடி அதிகரிக்கும் என்று தெரிவித்தனா்.

Leave a comment

Type and hit enter