அரச ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை?
வரிப்பணம் இல்லாமல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றை கொடுக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், புதிய முறையின்படி, வரி செலுத்துவதைத் தவிர்க்கும் தொழிலதிபர்கள் மற்றும் நபர்களைக் கண்டறிய முடியும்.
வரி செலுத்தாதவர்களை அப்போது எளிதில் அடையாளம் காண முடியும். அதற்காக வருமான வரி சட்டத்திலும் திருத்தம் செய்தோம்.
மற்றைய நாடுகளைப் போல, எதிர்காலத்தில், வரி ஏய்ப்பு செய்பவர்களை நேரடியாகக் கண்டுபிடிக்கும் முறைகளைக் கொண்டு வருவோம்.
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு இது பாரிய சுமையாக இருக்கின்றது. இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பல தடவைகள் கலந்துரையாடியுள்ளோம்.
எந்த விருப்பமும் இல்லாமல் வரியையும் அதிகப்படுத்த வேண்டியுள்ளது. ஜனாதிபதியினாலும் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
இலங்கை இனிமேலும் கடன் வாங்கியவாறு பயணிக்க முடியாது. வரிகளை வசூலிக்காமல் அரசு ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பது? ஓய்வூதியம் எவ்வாறு வழங்கப்படுகிறது? மக்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.
வரிப்பணம் இல்லாமல் அனைத்து சமூகநலப் பணிகளையும் அரசால் செய்ய முடியாது. அதுதான் யதார்த்தம் என குறிப்பிட்டுள்ளார்.