சர்ச்சைக்குரிய தடுப்பூசியை பெற்றவரா நீங்கள்?
சர்ச்சைக்குரிய தரம் குறைந்த ஹியுமன் இமியுனோக்பியுலின் தடுப்பூசியை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தடுப்பூசி சிகிச்சையை பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இந்த தடுப்பூசிகளுக்குள் ஒருவகை பக்டீரியா காணப்படுவதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மேற்கொண்ட பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி தொடர்பில் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதும் தடுப்பூசிகளில் பக்டீரியா காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, மாத்தறை தேசிய வைத்தியசாலை, மாத்தளை மாவட்ட தேசிய வைத்தியசாலை போன்ற வைத்தியசாலைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த தடுப்பூசி மருந்தை பயன்படுத்திய நோயாளிகள் தொடர்பில் தகவல்களை திரட்டுமாறு சுகாதார அமைச்சு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் நிபுணத்துவ மருத்துவர் டாக்டர் பாலித மஹிபால இந்த ஆலோசனையை வழங்கியதாக தெற்கு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி மருந்து விநியோகம் செய்யப்பட்ட தகவல்கள் மருத்துவ விநியோக பிரிவிடம் காணப்படுவதாகவும் விநியோகிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தரம் குறைந்த மருந்தை பயன்படுத்துவதன் மூலம் எய்ட்ஸ், ஹெபடைடிஸ் பிஈ ஹெபடைட்சி மற்றும் பக்டீரியா தொற்றுக்கள் போன்றன ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே இந்த நோயாளிகளை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து பொருள் தொடர்பிலான சர்ச்சைகள் வெளியான பின்னர் குறித்த மருந்து பயன்பாடு இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.