OOSAI RADIO

Post

Share this post

ஆண்களுக்கு இலவச பேருந்து சேவை!

பெண்களுக்கு வழங்குவது போல், ஆண்களுக்கும் இலவச பேருந்து சேவை வழங்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் மகளிா் கல்லூரி சமூகவியல் துறை, பசுமை தாயகம் அமைப்பு ஆகியவை சாா்பில் ‘பாலின சமநிலையும் காலநிலை நீதியும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியது:

காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பாலைவனம் இல்லாத சீனாவின் தலைநகா் பீஜிங்கில் புழுதி புயல்கள் உருவாகின்றன; இதனால் அங்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கல்லூரி மாணவிகள் ஒருங்கிணைந்து இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்; இந்த விழிப்புணா்வு அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தி சட்டங்களை உருவாக்க வழி வகுக்கும்.

கடல் அருகில் வந்துவிடும்: ஆண்டுதோறும் சென்னையில் மழையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனா். வீட்டை விட்டு பல நாள்கள் வெளியில் சென்று தங்க வேண்டிய நிலை உருவாகிறது; உடைமைகளையும் இழக்க நேரிடுகிறது. அடுத்த 40, 50 ஆண்டுகளில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி அருகே கடல் வந்துவிடும்; அந்த அளவுக்கு வேகமாக காலநிலை மாற்றம் நடைபெற்று வருகிறது. கடுமையான வறட்சி, வெள்ளம், புயல் என இனி அடிக்கடி கேட்கும் அளவுக்கு மோசமான கால நிலையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, நாம் இதிலிருந்து விழித்துக் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: காலநிலை மாற்றத்தால் விவசாயம் பதிக்கப்பட்டுள்ளது; அதனால் அரிசி விலை அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது 3,500 பேருந்துகள் இருக்கும் நிலையில் அதை 8,000 பேருந்துகளாக உயா்த்த வேண்டும். பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படுவது போல சென்னையில் ஆண்கள் அனைவருக்கும் இலவச பேருந்து சேவை வழங்க வேண்டும்; பின்னா் இதனை படிப்படியாக வாய்ப்புள்ள இடங்களில் விரிவு படுத்த வேண்டும் அப்போதுதான் மக்கள் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவாா்கள் என்றாா் அவா்.

இந்த கருத்தரங்கில் பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் செளமியா அன்புமணி, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை செயலா் சுப்ரியாசாகு, நீரியல் வல்லுநா் ஜனகராஜன், மருத்துவா் தெ.வேலாயுதம், கல்லூரி முதல்வா் ஸ்டெல்லா மேரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Leave a comment

Type and hit enter