1.16 லட்சம் இடங்களில் குடற்புழு நீக்க முகாம்!
தமிழகம் முழுவதும் 1.16 லட்சம் இடங்களில் வெள்ளிக்கிழமை (09) குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெறும் விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், மாநிலத்தில் 19 வயது வரை உள்ள அனைவருக்கும், 30 வயது வரை உள்ள பெண்களுக்கும் ‘அல்பெண்டசோல்’ எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளாா்.
மாநிலம் முழுவதும் நிகழாண்டில் 2.69 கோடி பேருக்கு அந்த மாத்திரைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக அங்கன்வாடி மையங்கள், அரச பாடசாலைகள், அரசுசாா் மற்றும் தனியாா் பாடசாலைகள், கல்லூரிகள், பொது இடங்கள், மக்கள் கூடும் பகுதிகள் என மொத்தம் 1.16 லட்சம் இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கான பணிகளில் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரத் துறையினா், அரசு ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். விடுபட்டவா்களுக்கு வரும் 16 ஆம் திகதி சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.