ஆப்பிளின் புதிய AI – இதில் என்ன இருக்கு தெரியுமா?
தொழில்நுட்ப உலகில் செய்யறிவின் எண்ணிக்கை பெருகிவிட்டது என்றுதான் கூறவேண்டும். செய்யறிவு இல்லாத வலைதளங்களுக்கு செல்வது, நெட் கிடைக்காத தாத்தா, பாட்டி ஊருக்கு சென்றது போல உணரும் காலம் வந்துவிட்டது. நம்மை அசையவிடாமல் எல்லா வேலையையும் செய்துமுடிக்கும் ஏஐ-கள் வரிசையாக நின்று வணக்கம் வைத்துக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் எந்த நிறுவனத்தின் செய்யறிவு மீத அனைத்திற்கும் தலைமை வகிக்கப்போகிறது என்ற போட்டி ஜிகா பைட்ஸ் வேகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. சாட் ஜிபிடியில் ஆரம்பித்து, பார்டு, ஜெமினை, க்ராக், டால்-இ, ஜென்-கிராப்ட், கோபைலட் என நூற்றுக்கணக்கான ஏஐ-கள் ஏற்கனவே பயன்பாட்டிற்கு உள்ளன.
அந்த ஏஐ அட்டன்டன்சில் புதிய வருகைதான் இந்த ஆப்பிளின் எம்ஜிஐஇ (MGIE) செய்யறிவு தொழில்நுட்பம். பெயர் வாசிக்க சற்று சிரமமாக இருக்கலாம், ஆனால் இந்த ஏஐ நம் சிரமமான வேலையை எளிதாக்குகிறது. மற்ற ஏஐ-கள் போல் இல்லாமல், புதிய வேலையைச் செய்கிறது.
எழுத்து மூலம் புகைப்படங்களை உருவாக்கும் ஏஐ-கள் ஏராளமாக இருக்க, இந்த ஏஐ எழுத்து மூலம் புகைப்படங்களை எடிட் செய்கிறது. அதாவது ஒரு புகைப்படத்தைக் கொடுத்து அதில், என்ன மாற்றம் வேண்டுமென இயல்பான மொழியில் பேசினால், அதை நிறைவேற்ற சரியான செயல்பாட்டுக் கட்டளையைக் கண்டறிந்து அதை எடிட் செய்கிறது.
எளிதாகச் சொல்லப்போனால், ‘இந்தப் புகைப்படத்தில் கடலின் நிறத்தை இன்னும் அதிகமாக ஊதாவாக மாற்று’ எனக் கூறினால், ‘கடலின் சாச்சுரேசன் அளவை 20% கூட்டவேண்டும்’ எனப் புரிந்துகொள்கிறது.
பொதுவான எடிட்டிங்குகளான க்ராப், ரொட்டேட், ஸ்டைல், டெக்சர் போன்றவற்றை சிறப்பாக மாற்றுகிறது இந்த புதிய ஏஐ. ஆப்பிளின் இந்த புதிய முயற்சி வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் பெரும்பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும், மற்ற ஏஐ-களைப் போல செயலி வடிவிலோ, இணையதளம் வாயிலாகவோ இதைப் பயன்படுத்த இன்னும் வழிவகை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.