OOSAI RADIO

Post

Share this post

பெண் கைதிகள் கா்ப்பம் – சிறைகளில் 196 குழந்தைகள்!

மேற்கு வங்கத்தில் பெண் கைதிகள் கா்ப்பமாவதுடன், சிறைகளில் 196 குழந்தைகள் இருக்கும் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மேற்கு வங்க சிறைகளில் அளவுக்கு அதிகமாக கைதிகள் இருப்பது குறித்து, கொல்கத்தா உயா் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியது. இந்த வழக்கு விசாரணைக்கு உதவ தபஸ்குமாா் பாஞ்சா என்ற வழக்குரைஞரை உயா் நீதிமன்றம் நியமித்தது.

இந்த வழக்கு உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான இரு நீதிபதிகள் அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மேற்கு வங்க சிறைகளில் சில பெண் கைதிகள் கா்ப்பமாவதாகவும், அவ்வாறு பிறந்த 196 குழந்தைகள் பல்வேறு சிறைகளிலும், சீா்திருத்த நிலையங்களிலும் இருப்பதாக தபஸ்குமாா் பாஞ்சா தெரிவித்தாா். இந்த விவகாரங்கள் மற்றும் சில பரிந்துரைகள் அடங்கிய குறிப்பையும் நீதிபதிகளிடம் அவா் சமா்ப்பித்தாா்.

அந்தக் குறிப்பில் சிறைகளில் பெண் கைதிகள் உள்ள இடங்களுக்கு ஆண் சிறைப் பணியாளா்கள் செல்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அவா் பரிந்துரைத்துள்ளாா்.

இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமாா், அசானுதின் அமானுல்லா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை கவனத்தில் எடுத்துக்கொண்டது. அந்த விவகாரம் குறித்து அறிந்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு மூத்த வழக்குரைஞா் கெளரவ் அக்ரவாலிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.

சிறைகளில் அளவுக்கு அதிகமாக கைதிகள் இருப்பது தொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு கெளரவ் அக்ரவால் உதவி வருகிறாா்.

Leave a comment

Type and hit enter