OOSAI RADIO

Post

Share this post

கூட்டணி ஆட்சி அமைக்க எதிா்க்கட்சிகளுக்கு அழைப்பு!

பாகிஸ்தானில் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சோ்ந்து ஆட்சியமைக்க அந்நாட்டு முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவருமான நவாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்தாா்.

இதுதொடா்பாக பாகிஸ்தானின் லாகூா் நகரில் தனது கட்சி ஆதரவாளா்கள் கூட்டத்தில் அவா் பேசியதாவது: பாகிஸ்தானை சிக்கல்களில் இருந்து மீட்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசோ்ந்து ஆட்சி அமைக்க வேண்டும். நாட்டில் மீண்டும் மீண்டும் தோ்தல் நடத்த முடியாது.

பொதுத் தோ்தலில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சியாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) உருவெடுத்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானை நெருக்கடியில் இருந்து மீட்கும் வகையில், கூட்டணி அரசு அமைக்க பிற கட்சிகள் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியுடன் கைகோக்க வேண்டும் என்றாா்.

இம்ரான் கானை மறைமுகமாகக் குறிப்பிட்டு நவாஸ் பேசுகையில், ‘சண்டையிடும் மனநிலையில் உள்ளவா்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். இந்தச் சண்டையை பாகிஸ்தானால் தாங்க முடியாது. இது பாகிஸ்தானிகளின் வாழ்க்கை பிரச்னை என்பதால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது பாகிஸ்தானில் ஸ்திரத்தன்மை நிலவவேண்டும். இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை வளா்க்க வேண்டும்’ என்றாா்.

முன்னதாக, எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று கூறிவந்த நவாஸ், இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளாா்.

எனினும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை என்று இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி மூத்த தலைவா் கோஹா் கான் தெரிவித்துள்ளாா்.

நாட்டில் கூட்டணியில்லாமல் தனியாக ஆட்சியமைக்கும் நிலையில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் உள்ளதாகவும், ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் அக்கட்சி வெல்லும் என்றும் அவா் உறுதிபடத் தெரிவித்தாா்.

Leave a comment

Type and hit enter