OOSAI RADIO

Post

Share this post

மாந்திரீக மம்மூட்டி பிரம்மயுகம் திரைப்படம் இதோ!

17 ஆம் நூற்றாண்டு தெற்கு மலபார் காட்டிற்குள் கதை நிகழ்கிறது. அடிமைச் சந்தையிலிருந்து தப்பிக்கும் தேவனும் (அர்ஜுன் அசோகன்) கோராவும் (மணிகண்டன்) அடர் வனத்துக்குள் சிக்கிக் கொள்கின்றனர். ஓர் இரவில் இருவரும் தீமூட்டிக் குளிர் காய்ந்துகொண்டிருக்கும்போது யட்சி வருகிறாள். தன் அழகில் மயங்கும் கோராவை யட்சி தனியாக அழைத்துச் செல்கிறாள். மதி மயங்கிச் செல்பவனை முடிந்தவரை தடுக்கும் தேவன் ஒருகட்டத்தில் தப்பித்து ஓடுகிறான்.

இரவு கடந்து அதிகாலை கண்விழிக்கும்போது அருவிக்கு அருகில் இருக்கும் தேவன் பசியால் மீண்டும் வனத்துக்குள் நுழைந்து வெளியேற வழி தேடிகிறான். ஆனால், அவன் கண்ணில் ஒரு பழைய வீட்டின் முகப்பு தென்படுகிறது. மெல்ல முன்னேறிச் சென்று பாழடைந்து கிடக்கும் அந்த பழைய வீட்டிற்குள் நுழைகிறான். அந்த வீடு, கொடுமன் போற்றிக்குச் (மம்மூட்டி) சொந்தமானது. கொடுமன் போற்றி, தேவனை விசாரித்து அவனுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். ஒருநாள் தான் இங்கிருந்து கிளம்புவதாகக் கூறும் தேவனை, கொடுமன் தடுக்கிறார். தேவனுக்கு ஏன் கொடுமன் நம்மை வெளியேற விடுவதில்லை என்கிற குழப்பங்கள் அதிகரிக்கிறது.

அப்போது, அங்கிருக்கும் சமையல்காரர் (சித்தார்த் பரதன்) உள்ளே வந்த யாரும் வெளியே செல்ல முடியாது என்பதுடன் கொடுமன் போற்றியைப் பற்றியும் அந்த வீட்டின் அமானுஷ்ய கதையையும் சொல்கிறார். இங்கிருந்து தப்பிக்க வழி இல்லையா எனத் தவிக்கும் தேவன், கொடுமன் போற்றியின் பிடியிலிருந்து மீண்டாரா இல்லையா என்பதுதான் பிரம்மயுகத்தின் கதை.

நூற்றாண்டுகளாக உலவும் மாந்திரீகங்கள், சடங்குகள், தீய சக்திகளுடன் இணைவதற்கான பூஜை என முழு அமானுஷ்யக் கதையாகவே பிரம்மயுகம் உருவாகியுள்ளது. யட்சி, சாத்தான் என தீயசக்திகளின் பிடியில் சாதாரண மனிதன் சிக்கிக்கொண்டால் என்னென்ன விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதைக் காட்சிக்குக் காட்சி அடுத்தது என்ன என்கிற சுவாரஸ்யத்துடன் திரையில் கடத்தியிருக்கிறார் இயக்குநர் ராகுல் சதாசிவன்.

ராகுலின் முந்தைய படமான பூதகாலத்திலும் வீட்டிற்குள் இருக்கும் அமானுஷ்யத்தை எதிர்கொள்ளும் நாயகனின் கதையை இயக்கியவர் பிரம்மயுகத்தில் பாரம்பரியமான பழைய வீட்டின் கதையாகவே படத்தை இயக்கியிருக்கிறார். பூதகாலத்தில் இருந்த அதே பரபரப்பு பிரம்மயுகத்திலும் இருக்கிறது. ஹாரர் வகை படங்களின் முடிவு ஊகிக்கக்கூடியது என்றாலும் பிரம்மயுகத்தின் கதைக்களம் நம் மூளைக்கு வேலை கொடுக்கும்படியாகவே உருவாக்கப்பட்டிருகிறது.

எதிர்மறைக் கதாபாத்திரமாக நடிப்பில் அசத்திவிட்டார் மம்மூட்டி. தேவனை சதி செய்யும் பகடையாட்ட விளையாட்டின்போது வெளிப்பட்ட மம்மூட்டியின் உடல்மொழியில் 50 ஆண்டுகால நடிகர் தெரிகிறார். இந்தியாவில் அதிக வயதில் நடித்துக்கொண்டிருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான மம்மூட்டியின் நடிப்பிற்காகவே பேசப்படும் பிரம்மயுகம்.

நண்பகல் நேரத்து மயக்கம், காதல் தி கோர் என தன் பிம்பத்தைப் பற்றி கவலைப்படாமல் நல்ல கதையைத் தேடிக்கொண்டிருக்கும் மம்மூட்டி, பிரம்மயுகத்திலும் தன் ரசிகர்களை ஏமாற்றவில்லை. கதைக்குத் தேவையான ஒன்றைத் தன் நடிப்பால் கச்சிதமாகக் கடத்தி விசில் அடிக்க வைக்கிறார்.

நடிகர் அர்ஜுன் அசோகன் நம்பிக்கைக்குரிய நடிகராக வருவார். தேவன் கதாபாத்திரத்தில் நடுங்கும் உடல்மொழியில் கதையின் நம்பகத்தன்மைக்கு உறுதுணையாக நடித்திருக்கிறார். சித்தார்த் பரதனின் சிரிப்பும், கோபமும் நினைவில் நிற்கிறது.

படத்தின் பலமும் பலவீனமும் கருப்பு வெள்ளை வடிவம்தான். சில இடங்களில் பெரிய திரையனுபவம் காத்திருக்கிறது என நினைக்கும்போது அடுத்த காட்சிகளில் தொழில்நுட்ப ரீதியான தரக்குறைவால் கருப்பு வெள்ளை வடிவம் பலத்தை இழக்கிறது. டிரைலரில் வெளிப்பட்ட தரம் பெரிய திரையில் குறைவாக இருந்ததுபோல் இருந்தது.

சாதாரண ஹாரர் கதையாக இதை எழுதாமல், 17 ஆம் நூற்றாண்டு முதல் இன்றுவரை இருக்கும் சாதிய அடக்குமுறை பிரச்னையையும் பேசியிருக்கிறார் இயக்குநர். தெய்வத்தைப் பற்றிப் பாடினாலும் பாணர் குலத்தினர் உயர்சாதியினரின் வீட்டின் வாசலைக்கூட மிதிக்க முடியாத சூழலே இருந்தது. ஆனால், அந்த வீட்டில் சாத்தான் இருந்தால் அதற்கு, சாதியும் மதமும் என்னவாக இருக்கிறது என்பதை வசனமாக்கிக் கைதட்ட வைக்கிறார் இயக்குநர்.

ஷெனாத் ஜலாலின் ஒளிப்பதிவு, ஷபீக் முகமது அலியின் எடிட்டிங், கிறிஸ்டோ சேவியரின் இசை ஆகியவை படத்திற்கு உயிரூட்டியிருக்கின்றன. முதல் காட்சியின் நிலவிலிருந்து இறுதியில் காட்டப்பட்ட அருவி வரை ஒலி அமைப்புகள் கவனத்தைச் சிதறாமல் பார்த்துக்கொண்டன.

தற்போது, மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் நுணுக்கமான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். காதல் தி கோர், மலைக்கோட்டை வாலிபன் என மம்மூட்டி, மோகன்லால் போன்ற வசூல் மன்னர்களே இயக்குநர்களை நம்பிக் களத்தில் இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் முழுக்க கருப்பு வெள்ளையில் வெளியான பிரம்மயுகம் ரசிகர்களை ஏமாற்றவில்லை!

Leave a comment

Type and hit enter