ஜெயலலிதாவின் நகைகளை பெற்றுக்கொள்ள தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
கர்நாடக அரசின் வசம் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை பெற்றுக்கொள்ளுமாறு தமிழக அரசுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் மார்ச் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் தமிழ்நாடு மாநில உள்துறை செயலாளர் நேரில் முன்னிலையாகி இந்த நகைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக 1996ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
அப்போது ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த சோதனையில் தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், கைக் கடிகாரங்கள் என ஏராளமானவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்றதால் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் அங்குள்ள திறைசேரியில் வைக்கப்பட்டன.
இதற்கிடையே 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார்.
அதனைத் தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
இதனையடுத்து சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று விடுதலையாகினர்.
இதற்கிடையே, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும் எனவும், அதன் மூலம் வரும் பணத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் கோரி சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அரசால் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களில் தனக்கு உரிமை உண்டு எனவும், அவற்றை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மனுதாக்கல் செய்தார்.எனினும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தநிலையில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்கள் தொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, நகைகளை ஏலம் விடுவதற்குப் பதிலாக, தமிழக அரசின் உள்துறை மூலமாக தமிழ்நாட்டுக்கு மாற்றுவது நல்லது என்று முடிவெடுக்கப்பட்டது எனவே தமிழக அரசு செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி, காவல்துறையினருடன் இணைந்து நகைகளை பெற்றுக்கொள்ள வருமாறு உத்தரவிடப்பட்டது.
அதன்படி பெங்களூரில் இருந்து 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள், 11,344 விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், 740 விலை உயர்ந்த செருப்புகள் என மொத்தமாக 6 பெட்டகங்களில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளன இவற்றின் மதிப்பு பல கோடி இருக்கலாம் எனத் தெரிகிறது.
அவை, தமிழ்நாடு அரசின் திறைசேரியில் வைக்கப்படும். இதேவேளை நகைகளை கர்நாடக அரசிடம் இருந்து தமிழ்நாடு அரசு பெறுவதற்கும், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை நடத்தியமைக்கும், கர்நாடக அரசு செய்த செலவினங்களுக்காக கர்நாடக அரசுக்கு 5 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கவேண்டும் என பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.