நடுக்கடலில் மீனவர்களிடையே மோதல் – ஒருவர் பலி!
நடுக்கடலில் திடீர்குப்பம் – கீச்சாங்குப்பம் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியானார்.
நாகை மாவட்டம், திடீர்குப்பத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அவரது சகோதரர்கள் ஆத்மநாபன், சிவனேசெல்வம், காலஸ்திநாதன் ஆகியோர் நேற்று மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் நாகை கடற்கரையில் இருந்து சுமார் 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கீச்சாங் குப்பத்தைச் சேர்ந்த கோகிலா செல்விக்கு சொந்தமான விசைப்படையில் 10 பேர் மீன்பிடிக்க சென்றபோது பைபர் படகின் மீன்பிடி வலை சேதமானதாகக் கூறப்படுகிறது.
இதில் தகராறு ஏற்பட்டு, விசைப்படகில் இருந்த மீனவர்கள் பல்வேறு உபகரணங்களால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் திடீர்குப்பத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் சிவனேசெல்வம் பலத்த காயமடைந்து பலியானார்.
காலஸ்திநாதன் கடலில் மாயமானார். இடது கையில் முறிவு ஏற்பட்ட ஆத்மநாபனை அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீட்டு நாகை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசைப்படகு மீனவர்கள் 8 பேரை வேதாரண்யம் அருகே ஆற்காட்டுத்துறையில் போலீஸார் கைது செய்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மீனவ சகோதரர்கள் மூவர் மீது நடுக்கடலில், தாக்குதல் நடத்திய சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே திடீர் குப்பம் மற்றும் கீச்சான் குப்பம் மீனவ கிராமங்களுக்கிடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவிக்கப்பட்டுள்ளனர்.