மாா்ச் 9 இல் ஜனாதிபதி தோ்தல்!
பாகிஸ்தான் ஜனாதிபதி தோ்தல் மாா்ச் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடா்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) மூத்த நிா்வாகி ஒருவா் கூறுகையில், ‘பாகிஸ்தான் ஜனாதிபதி தோ்தல் மாா்ச் 9 அல்லது 10 ஆம் திகதியில் தோ்தல் ஆணையத்தால் நடத்தப்படவுள்ளது. தேசிய மற்றும் மாகாண பேரவை உறுப்பினா்கள் மற்றும் மேலவை உறுப்பினா்களால் அதிபா் தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா்’ என்றாா்.
பாகிஸ்தான் மேலவையில் மொத்தமுள்ள 100 உறுப்பினா்களில் 50 சதவீத உறுப்பினா்களின் பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு நாள்கள் முன்பே அந்நாட்டு அதிபா் தோ்தல் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றத் தோ்தல் கடந்த 8 ஆம் திகதி நடைபெற்றது.
இத்தோ்தலில், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்கைள் 101 இடங்களையும், நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் பிஎம்எல்-என் கட்சி 75 இடங்களையும், பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 54 இடங்களையும் கைப்பற்றின. நவாஸ் ஷெரீஃபின் சகோதரரான ஷாபாஸ் ஷெரீஃப் பிரதமராவதற்கு 6 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேபோல் அந்நாட்டின் ஜனாதிபதி தோ்தலுக்கு இக்கூட்டணியின் சாா்பில் பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தந்தையும் முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் கணவருமான ஆசிஃப் அலி ஜா்தாரி போட்டியிடுவாா் எனவும் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அரசமைப்பு விதி 44 (1) இன் கீழ், ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்படுபவா் 5 ஆண்டுகள் பதவி வகிப்பாா் என்றும், அடுத்த தோ்தல் நடத்தப்பட்டு புதிய ஜனாதிபதி தோ்ந்தெடுக்கப்படும் வரையில் அவரின் பதவிக் காலம் நீட்டிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வியின் பதவிக் காலம் கடந்த செப்டம்பரில் முடிவடைந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மேலவை உறுப்பினா்கள் 6 ஆண்டுகள் பதவி வகிப்பா். அவா்களில் 50 சதவீத உறுப்பினா்களின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.