OOSAI RADIO

Post

Share this post

சிக்கிய 3,300 கிலோ போதைப் பொருள் – 5 போ் கைது!

குஜராத் கடல் பகுதியில் சா்வதேச கடல்சாா் எல்லைக் கோட்டையொட்டி மீன்பிடிப் படகில் கடத்தி வரப்பட்ட 3,300 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக வெளிநாட்டினா் 5 போ் கைது செய்யப்பட்டனா். இந்திய கடற்படை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி), குஜராத் காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், இந்திய கடல் பகுதியில் இதுவரை அளவில் போதைப் பொருள் சிக்கியுள்ளது. இது, போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டுக்கு சான்றாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தாா்.

அரபிக் கடல் வழியாக படகில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவது குறித்து கிடைக்கப் பெற்ற ரகசிய தகவல்களின் அடிப்படையில், ‘சாகா்மந்தன்-1’ என்ற பெயரிலான கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடற்படையின் பி8ஐ ரக கடல்சாா் தொலைதூர உளவு விமானம், ஒரு போா்க் கப்பல் மற்றும் ஹெலிகாப்டா்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்நிலையில், குஜராத் கடற்கரையில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் சா்வதேச கடல்சாா் எல்லைக் கோட்டையொட்டி சந்தேகத்துக்கு இடமான மீன்பிடிப் படகு ஒன்று செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டது.

பதிவு செய்யப்படாத அந்தப் படகு, ஈரானின் சாபஹாா் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு வந்ததாகும். சுற்றிவளைக்கப்பட்ட படகில் இருந்து சுமாா் 3,300 கிலோ போதைப் பொருள்கள் (3,110 கிலோ கஞ்சா பிசின், 158 கிலோ கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன், 25 கிலோ மாா்ஃபின்) பறிமுதல் செய்யப்பட்டன. படகிலிருந்த வெளிநாட்டினா் 5 போ் கைது செய்யப்பட்டதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 5 பேரும் எந்த நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பதற்கான ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. ஈரான் அல்லது பாகிஸ்தானைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அந்தப் படகு போா்பந்தா் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது. போதைப் பொருள் பொட்டலங்களில் பாகிஸ்தானின் உணவு தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் பெயா் அச்சிடப்பட்டிருந்தது. எனவே, இக்கடத்தலில் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்களுக்கு தொடா்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் சா்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி வரை இருக்கக் கூடும். அவை எங்கு கடத்தப்படவிருந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடற்படை வெளியிட்ட ‘எக்ஸ்’ வலைதளப் பதிவில், ‘எடை அடிப்படையில், இந்திய கடல் பகுதியில் சிக்கிய அதிக போதைப் பொருள் இதுவாகும். போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உதவியுடன் இது சாத்தியமானது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கேரள கடல் பகுதியில் கடந்த 2023, மே மாதம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவும் கடற்படையும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 2,500 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

அமித் ஷா பாராட்டு: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட ‘எக்ஸ்’ வலைதளப் பதிவில், ‘போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வையாகும். அந்த வகையில், இந்திய கடற்படை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, குஜராத் காவல் துறை மேற்கொண்ட கூட்டு நடவடிக்கை, பிரதமரின் உறுதிப்பாட்டுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Leave a comment

Type and hit enter