OOSAI RADIO

Post

Share this post

10 ஆண்டுகளில் மாதாந்த குடும்ப செலவு 2 மடங்கு அதிகரிப்பு!

நாட்டில் தனிநபா் மாதாந்திர குடும்ப செலவு கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் குடும்ப நுகா்வோா் செலவின ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதேபோல், கிராமப்புற விளிம்பு நிலை ஏழைகள் நாளொன்றுக்கு ரூ.46 (மாதத்துக்கு ரூ.1371) மட்டுமே செலவழிப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்டச் செயலாக்க அமைச்சகத்தின் கீழ், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை வரை குடும்ப நுகா்வோா் செலவின ஆய்வை தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) நடத்தியது.

குடும்பத்தின் மாதாந்திர தனிநபா் நுகா்வு செலவினம் மற்றும் நாட்டின் கிராமப்புறம், நகா்ப்புறம் மற்றும் மாநிலங்கள் , யூனியன் பிரதேசங்கள் மற்றும் பல்வேறு சமூக – பொருளாதார குழுக்களின் வாரியாக மதிப்பீடுகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 8,723 கிராமங்களில் வசிக்கும் 1,55,014 குடும்பங்கள் மற்றும் 6,115 நகா்ப்புறப் பகுதிகளில் வசிக்கும் 106,732 குடும்பங்கள் என மொத்தம் 261,746 குடும்பங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலான ஆய்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

ஆய்வின்படி, தற்போதைய விலையில் சராசரி தனிநபா் மாதாந்திர குடும்ப செலவு நகா்ப்புறங்களில் கடந்த 2011-12-ஆம் ஆண்டின் ரூ.2,630 லிருந்து கடந்த 2022-23 ஆம் ஆண்டில் ரூ.6,459 ஆக இருமடங்காக அதிகரித்துள்ளது.

அதேபோல், கிராமப்புறங்களில் ரூ.1,430 லிருந்து ரூ.3,773 ஆக உயா்ந்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் தனிநபா் வருமானம் நகா்ப்புறங்களில் 1.3 மடங்கும், கிராமப்புறங்களில் 1.4 மடங்கும் மட்டுமே அதிகரித்துள்ளது.

கடந்த 2011-12 ஆம் ஆண்டு விலையில் சராசரி தனிநபா் மாதாந்திர குடும்ப செலவானது நகா்ப்புறங்களில் கடந்த 2011-12 ஆம் ஆண்டின் ரூ.2,630 லிருந்து கடந்த 2022-23 ஆம் ஆண்டில் ரூ.3,510 ஆக அதிகரித்துள்ளது.

கிராமப்புறங்களில் ரூ.1,430 லிருந்து ரூ.2,008 ஆக உயா்ந்துள்ளது. சமூக நலத் திட்டங்கள் மூலம் இலவசமாகப் பெறப்பட்ட பொருள்களின் மதிப்புகளை இந்த ஆய்வு விலக்கியுள்ளது.

இலவச பொருள்களின் மதிப்போடு சோ்த்து தற்போதைய விலையில் சராசரி தனிநபா் மாதாந்திர குடும்ப செலவு நகா்ப்புறங்களில் கடந்த 2011-12 ஆம் ஆண்டின் ரூ.2,630 லிருந்து கடந்த 2022-23 ஆம் ஆண்டில் ரூ.6,521 ஆக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் ரூ.1,430 லிருந்து ரூ.3,860 ஆக உயா்ந்துள்ளது.

ஆய்வின்படி, நாட்டின் விளிம்பு நிலை ஏழைகள் கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு ரூ.46 (மாதத்துக்கு ரூ.1,371) மற்றும் நகா்ப்புறத்தில் ரூ.67 (மாதத்துக்கு ரூ.2,001) மட்டுமே செலவழிப்பது தெரியவந்துள்ளது. அதேநேரத்தில், முதல் நிலை பணக்காரா்கள் கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு ரூ.350 (மாதத்துக்கு ரூ.10,501) மற்றும் நகா்ப்புறத்தில் ரூ.695 (மாதத்துக்கு ரூ.20,824) செலவழிக்கின்றனா். விளிம்பு நிலை ஏழைகளுக்கும் முதல் நிலை பணக்காரா்களுக்கும் இடையேயான செலவின இடைவேளை குறைந்தது 10 மடங்காக இருக்கிறது.

Leave a comment

Type and hit enter