OOSAI RADIO

Post

Share this post

குறைந்துவரும் குழந்தைப் பிறப்பு!

ஜப்பானில் தொடர்ந்து எட்டாவது ஆண்டாகக் கடந்த 2023 ஆம் ஆண்டிலும் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே குழந்தைகளே பிறந்துள்ளன.

2023 ஆம் ஆண்டில் ஜப்பானில் 758,631 குழந்தைகளே பிறந்துள்ளன. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 5.1 சதவிகிதம் குறைவு என நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் புள்ளிவிவரங்கள் சேகரிக்கத் தொடங்கப்பட்ட 1899 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலான காலகட்டத்தில் இதுவே மிகவும் குறைவு.

இதேபோல திருமணங்களின் எண்ணிக்கையும் மிக மோசமாகக் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட 5.9 சதவிகிதம் குறைந்து, 2023 இல் 489,281 திருமணங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளன. கடந்த 90 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் திருமணம் நடந்திருப்பதும் இதுவே முதல் முறை. இதுவும் குழந்தை பிறப்பு குறைவுக்கு ஒரு முக்கியமான காரணம்.

வேறு சில மேற்கத்திய நாடுகளைப் போல அல்லாமல், ஜப்பானில் மணம் புரிந்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்வது மிகவும் குறைவு. ஜப்பானிய கலாசாரம் அப்படி. பெரும்பாலான ஜப்பானிய இளைய தலைமுறையினர் திருமணம் புரிந்துகொள்வதிலோ குடும்பங்களை ஏற்படுத்திக் கொள்வதிலோ ஆர்வமில்லாமல் அல்லது தயக்கத்துடன் இருக்கின்றனர்.

வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினை, ஊதியத்துக்குச் சற்றும் பொருந்தாத வகையில் மிக மோசமான அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்துவிட்டிருப்பது, பெருநிறுவன கலாசாரம் எல்லாமும் திருமணங்களுக்குத் தடைகளாக இருக்கின்றன. அழுகிற குழந்தைகளும் வெளியே குழந்தைகள் விளையாடுவதும்கூட இப்போது தொந்தரவாகப் பார்க்கப்படுகின்றன.

‘இது மிகவும் மோசமான நிலைமை’ என்று செய்தியாளர்களுடன் பேசிய ஜப்பானிய அமைச்சரவை முதன்மைச் செயலர் யோஷிமாஸா ஹயாஷி தெரிவித்துள்ளார். அடுத்த ஆறு ஆண்டுகளில், 2030 களுக்குள் இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும், இதுவே கடைசி வாய்ப்பு. இனியும் காலத்தை வீணடிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஜப்பான் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய சிக்கல் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் ஃபூமியோ கிஷிடா, குழந்தைப் பிறப்பு, குழந்தைகள், அவர்களின் குடும்பங்களுக்கு உதவி போன்றவற்றையும் அறிவித்துள்ளார். எனினும், இதுபோன்ற அரசு நடவடிக்கைகளால் பெரிய பயனேதும் விளையுமா என்பது பற்றி வல்லுநர்கள் சந்தேகம்தான் தெரிவிக்கின்றனர்.

ஏனெனில், ஏற்கெனவே, திருமணமானவர்கள், குழந்தை பெற்றுக்கொள்ள விழைவோரை இலக்காகக் கொண்டுதான் அரசின் திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், திருமணம் செய்துகொள்வதில் அக்கறை கொள்ளாத, ஆர்வம் காட்டாத, அதிகரித்து வரும் இளைய தலைமுறையினர் விஷயத்தில் அந்த அளவுக்குப் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை.

கடந்த 50 ஆண்டுகளாகக் குழந்தை பிறப்பு குறைந்துகொண்டேதான் இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன் குழந்தைப் பிறப்பு 21 லட்சமாக இருந்தது! 2035 ஆம் ஆண்டில்தான் குழந்தைப் பிறப்பு 760,000 ஆகக் குறையும் எனக் கணிக்கப்பட்டிருந்தபோதிலும் மிக விரைவாக, இப்போதே 2023 லேயே, அந்த அளவுக்குக் குறைந்துபோய்விட்டது.

12.5 கோடிக்கும் சற்று அதிகமான தற்போதைய ஜப்பானுடைய மக்கள்தொகை வரும் 2070 ஆம் ஆண்டில் சுமார் 30 சதவிகிதம் குறைந்து 8.7 கோடியாகிவிடும் என அஞ்சப்படுகிறது, ஏனெனில், தற்போதைய மக்கள்தொகையில் 10 இல் 4 பேர் 65 வயது அல்லது அதற்கும் அதிகமானவர்களே.

மக்கள்தொகை குறைவதும் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதும் ஜப்பானின் பொருளாதாரத்திலும், எல்லையை விரிவாக்குவதில் சீனா கொண்டிருக்கும் அக்கறை அதிகரித்துவரும் நிலையில் ராணுவரீதியாக எதிர்கொள்ள முடியாத நிலையேற்பட்டு, நாட்டின் பாதுகாப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

Leave a comment

Type and hit enter