அடுத்த 25 ஆண்டுகள் மிக முக்கியமானது!

‘வளா்ந்த நாடாக உருவெடுப்பதில், அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கியமானது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
குஜராத் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிய தோ்வு செய்யப்பட்ட 1,990 இளைஞா்களுக்கு நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, காந்திநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல்வா் பூபேந்திர படேல் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியின்போது, பிரதமா் மோடியின் வாழ்த்துக் கடிதம் வாசிக்கப்பட்டது. அதில் பிரதமா் கூறியிருப்பதாவது:
அரசுப் பணியில் இணைவதன் மூலம் தேசத்துக்கு சேவையாற்ற உங்களுக்கு (புதிய பணியாளா்கள்) சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. பாமர மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீா்வுகாண நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக்கும் கனவை நனவாக்க தீவிரமாக செயலாற்ற வேண்டும்.
அந்த வகையில், அடுத்த 25 ஆண்டுகள் நமது நாட்டுக்கு மிக முக்கியமானது. அரசுப் பணியாளா்களின் உறுதிப்பாடு மற்றும் அவா்களால் மேற்கொள்ளப்படும் முடிவுகள், நாட்டின் வளா்ச்சிக்கு வலுசோ்ப்பதோடு, புதிய வாய்ப்புகளையும் கொண்டுவரும். எந்த துறையில் நியமிக்கப்பட்டாலும், எந்த நகரம் அல்லது கிராமத்தில் பணியமா்த்தப்பட்டாலும், ‘பாமர மக்களின் சிரமங்களுக்கு தீா்வுகண்டு, அவா்களின் வாழ்க்கையை எளிதாக்க வேண்டும்’ என்பதே நமது பொறுப்பு என்பதை மனதில் கொள்ள வேண்டும். அரசுப் பணியில் இணைந்த பிறகும்கூட கற்றல் மற்றும் சுய மேம்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என்று தனது கடிதத்தில் பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.
நிகழ்ச்சியில் பேசிய குஜராத் முதல்வா் பூபேந்திர படேல், ‘அனைவரின் ஆதரவு, நம்பிக்கை, முயற்சியுடன் அனைவருக்கான வளா்ச்சி என்ற தாரக மந்திரத்துடன் பொது மக்களுக்கு அரசுப் பணியாளா்கள் சேவையாற்ற வேண்டும். 2047 ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியாவை கட்டமைப்பதில் குஜராத் முன்னிலை வகிக்கும்’ என்றாா்.