நிலவில் அணு உலை!
வரும் 2033 ஆம் ஆண்டிலிருந்து 2035 ஆம் ஆண்டுக்குள் ரஷ்யாவும், சீனாவும் இணைந்து நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டமிட்டு வருவதாக ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸின் தலைமை செயல் அதிகாரி யூரி போரிசொவ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் கூறியதாவது:
சீனாவுடன் இணைந்து நிலவில் அணு உலை அமைப்பதற்கான திட்டத்தை உருவாக்கி வருகிறோம். 2033 லிருந்து 2035 க்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பரிசீலித்து வருகிறோம். அந்தப் பணியை மேற்கொள்வது முழுக்க முழுக்க தானியங்கி முறையில் நடத்தப்படவேண்டும். அதற்கான தொழில்நுட்பங்கள் ஏறத்தாழ முழுமையாக தயாராக உள்ளன என்றாா் அவா்.
முன்னதாக, நிலவில் சா்வதேச ஆய்வு நிலையத்தை (ஐஎல்ஆா்எஸ்) அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் ரோஸ்கோஸ்மாஸும், சீன விண்வெளி ஆய்வு நிறுவனமான சிஎன்எஸ்ஏ வும் கடந்த 2021 ஆம் ஆண்டு கையொப்பமிட்டன.
இதற்காக வரும் 2026 இல் நிலவுக்கு கலங்களை அனுப்பவும், ஆய்வு நிலையம் அமைப்பதற்கான பணிகளை 2028 இல் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே, நிலவில் அணு உலையை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.