அஜித் உடலில் புது பிரச்சினை – பரபரப்பு விளக்கம்!

நடிகர் அஜித் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரின் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். அவர் நேற்று திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித்துக்கு என்ன ஆச்சு என தெரியாமல் ரசிகர்கள் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து அஜித் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட விளக்கத்தில் அவர் ரெகுலர் செக் அப்பிற்காக மட்டுமே மருத்துவமனை சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அஜித்துக்கு அப்பல்லோ மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அஜித்துக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அதனை நான்கு மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவர்கள் அகற்றியதாகவும் தகவல் வெளியானது. மேலும் அஜித் மருத்துவர்களின் திவீர கண்காணிப்பிலேயே இருப்பதாக கூறப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இந்த நிலையில், மருத்துவமனையில் அஜித்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, அஜித்துக்கு மூளையில் கட்டி இருப்பதாக சொல்லப்படுவது உண்மையல்ல என்றும் கூறிய அவர், வழக்கமான பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு காதுக்கு கீழே நரம்பு வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டதாகவும், பின்னர் அதற்கான சிகிச்சை அரை மணிநேரம் நடந்ததாகவும் கூறினார்.
அந்த சிகிச்சைக்கு பின்னர் நேற்று இரவே அஜித் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், இன்று இரவு அல்லது நாளை காலை அஜித் வீடு திரும்புவார் என்றும் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். அவரின் இந்த விளக்கம் அஜித் ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. இதையடுத்து சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் நடிகர் அஜித் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
