சிறுமிகளை வைத்து நடந்துள்ள பயங்கரம்!
சிறுமிகளை வைத்து நிர்வாண பூஜை நடத்தினால் செல்வம் சேரும் என்று உத்தரவாதத்தில், பாலியல் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 7 பேர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தன்னைத்தானே சாமியார் அல்லது பாபா என்று சொல்லிக்கொண்டு, மக்களின் அறியாமையை பயன்படுத்தி மோசடி செய்வோர் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். வெகுஜனங்களின் ஆன்மிக ஈடுபாட்டை குற்றச்செயல்களில் மடைமாற்றி இவர்கள் கொழித்தும் வருகிறார்கள்.
மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில் இவ்வாறு, சிறுமிகளை வைத்து நிர்வாண பூஜை நடத்தினால் செல்வம் சேரும் என்று ஆசை காட்டி சிறுமிகளை சீரழித்து, வீடியோ எடுத்த ’பாபா’ மற்றும் அவரது உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த உதவியாளர்களில் 2 பெண்களும் அடங்குவர்.
ரபோடி பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கத் தலைப்பட்ட போலீஸார், அதிர்ச்சிகரமான பாலியல் மோசடிகள் மற்றும் அது சார்ந்த குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.
தானே போலீஸாரின் பிடியில் அஸ்லம் கான் மற்றும் சலீம் ஷேக் என்ற இருவர் கடந்த வாரம் கைது செய்யப்படனர். அவர்களை முறைப்படி துருவி விசாரித்ததில், முக்கிய குற்றவாளியான சாஹெப்லால் வஜீர் ஷேக் என்ற யூசுப் பாபாவைப் பற்றி காவல்துறை அறிந்தனர்.
யூசுப் பாபாவுக்கு பொறிவைத்து காத்திருந்த போலீஸார், தற்போது மேற்படி பாபாவையும் வளைத்துள்ளனர். யூசுப் பாபாவும் அவரது கூட்டாளிகளும் பொருளாதார ரீதியாக பெரும் அதிர்ஷ்டத்தை எதிர்நோக்குவோருக்கு, பிளாக் மேஜிக் நடைமுறைகளை ஆசை காட்டுவார்கள். சூனிய சடங்குகளில் சிறுமிகளை மிரட்டி நிர்வாணமாக பங்கேற்க செய்ததுடன், ஆட்சேபகரமான பாலியல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் செல்போன்களில் கிடைத்த ஆபாச வீடியோக்கள் கண்டு போலீஸார் அதிர்ந்து போயுள்ளனர். சில சம்பவங்களில் சிறுமிகளை கடத்தியதும், அதற்கு பின்னர் அந்த சிறுமிகள் தடயமற்று போனதும், இந்த குற்ற வழக்கில் தொடர் விசாரணையை கோரி இருக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பாலியல் பலாத்காரம், ஆள்கடத்தல், ஏமாற்றுதல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.