Darling என அழைத்தால் இனி அது பாலியல் துன்புறுத்தல்!

அறிமுகமில்லாத பெண்ணை “டார்லிங்” என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தலாகக் கருதப்படும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2015ஆம் ஆண்டில் அந்தமானில் உள்ள வெபி கிராமத்தில் பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் காவலரை ஜனக் ராம் என்பவர் “டார்லிங் அபராதம் விதிக்க வந்தாயா?” என கேட்டதாக மாயபந்தர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டில் நீதித்துறை நீதவான் முன்பான விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட ஜனக் ராமிற்கு மூன்று மாத சிறைத்தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை கூடுதல் அமர்வு நீதிபதியும் உறுதி செய்தார்.
இதைதொடர்ந்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை நீதிபதி ஜெய் சென்குப்தா விசாரித்தார். சம்பவத்தின் போது ஜனக் ராம் குடிபோதையில் இருந்ததாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்ட நிலையில், காவல்துறையினரால் வழங்கப்பட்ட சாட்சியங்கள் போதுமானவை என நீதிபதி தெரிவித்தார்.
குடிபோதையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தெரியாத எந்த பெண்ணையும் ‘டார்லிங்’ என அழைக்க முடியாது என நீதிபதி கூறினார்.
ஜனக் ராம் கூறியது பாலியல் தொல்லை வரம்பிற்குள் அடங்கும் என்ற நீதிபதி, தண்டனையை உறுதி செய்தார். மூன்ற மாத சிறைத் தண்டனையை ஒரு மாதமாக குறைத்து உத்தரவிட்டார்.