OOSAI RADIO

Post

Share this post

நடுவானில் பறந்த விமானம் – தூங்கிய விமானிகள்!

153 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் சென்று கொண்டிருந்த சமயத்தில், அதை இயக்கிய விமானிகள் இருவர் அரை மணி நேரம் உறங்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தென்கிழக்கு சுலவேசியில் இருந்து இந்தோனேசிய தலைநகர் ஜகார்டாவுக்கு கடந்த ஜனவரி 25 ஆம் திகதி படிக் ஏர் விமானத்தின் விமானம் ஒன்று சென்றது. அதை இயக்கிய விமானி மற்றும் இணை விமானி இருவரும் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது சுமார் 28 நிமிடங்கள் உறங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் அந்நாட்டு தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் நடத்திய விசாரணையில் அம்பலமாகி உள்ளது. 153 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் 2 மணி 35 நிமிடத்தில் ஜகார்டாவில் தரையிறங்க வேண்டும். இந்த பயணத்தின் போது விமானம் தவறான பாதையில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது, விமானி தன்னுடன் காக்பிட்-இல் இருந்த இணை விமானியிடம் தனக்கு ஓய்வு வேண்டும் என அனுமதி கேட்டுள்ளார். இணை விமானி அதற்கு அனுமதி அளித்ததால், விமானி உறங்கியுள்ளார். அனுமதி அளித்த இணை விமானியும், சிறிது நேரத்திலேயே அசதி காரணமாக உறங்கியுள்ளார். 28 நிமிடங்கள் விமானி மற்றும் இணை விமானி உறங்கியுள்ளனர்.

இருவரும் உறங்கி கொண்டிருந்த போது, ஜகார்டா கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விமானியை தொடர்பு கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், இருவரும் உறங்கி கொண்டிருந்ததால், விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. 28 நிமிடங்கள் உறங்கிய இணை விமானி அதன் பின்னர் விழித்துக் கொண்டு விமானம் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தார்.

இந்த சம்பவத்தின் போது உறங்கிய இரு விமானிகளின் பெயர் மற்றும் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், இருவருக்கும் முறையான ஓய்வு வழங்காமல் பணி செய்ய வைத்தது விசாரணையில் தெரியவந்தது. நல்ல வேளையாக இந்த சம்பவத்தின் போது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Leave a comment

Type and hit enter