OOSAI RADIO

Post

Share this post

​லொரி மீது பஸ் உரசி 3 மாணவர்கள் பலி!

மேல்மருவத்தூர் அருகே கண்டெய்னர் லாரி மீது பஸ் உரசியதில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற 3 கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

மதுராந்தகத்தில் தனியார் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு மேல்மருவத்தூர் அருகே உள்ள ராமாபுரம் பகுதியை சேர்ந்த கமலேஷ்(வயது19), சூனாம்பேடு தனுஷ்(19), மோகல்வாடி பகுதியை சேர்ந்த மோனிஷ்(19) உள்ளிட்டோர் படித்து வந்தனர். அவர்கள் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

இன்று காலை கமலேஷ் உள்ளிட்ட மாணவர்கள் அனைவரும் வழக்கம் போல் சூனாம்பேட்டில் இருந்து அச்சரப்பாக்கம் வழியாக மதுராந்தகம் நோக்கி சென்ற தனியார் பஸ்சில் கல்லூரிக்கு புறப்பட்டனர். பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

மேல்மருவத்தூர் அருகே சிறுநாகலூர் என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டு இருந்த போது சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது திடீரென பஸ் உரசியது.

இதில்படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கமலேஷ், தனுஷ், மோனிஷ் மற்றும் ஒரு மாணவர் என 4 பேர் இடிபாட்டில் சிக்கி சாலையில் விழுந்தனர். இந்த விபத்தில் கமலேஷ், தனுஷ், மோனிஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மற்றொரு மாணவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.

தகவல் அறிந்ததும் மேல்மருவத்தூர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய மாணவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலியான 3 மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் பஸ்சின் மற்றொரு படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மேலும் 5 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

பலியான 3 மாணவர்களும் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தனர். கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் பலியானது பற்றி அறிந்ததும் அவர்களது பெற்றோர் கதறி துடித்தனர். மாணவர்களின் உடல்களை பார்த்து உடன் படித்த மாணவர்கள் கண்ணீர் வடித்தனர். இதனை பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a comment

Type and hit enter