OOSAI RADIO

Post

Share this post

காஸாவை நோக்கிப் புறப்பட்டது முதல் நிவாரணக் கப்பல்!

போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவுக்கு கடல் வழியாக நிவாரணப் பொருள்களை வழங்கும் திட்டத்தின் முன்னோட்டமாக, சைப்ரஸிலிருந்து உணவுப் பொருள்களுடன் கப்பல் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.

பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ள காஸா மக்களுக்கு தற்போது தரைவழியாகவும், வான்வழியாகவும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்படுவது போதுமான அளவில் இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது.

இந்தச் சூழலில், கடல் வழியாக காஸாவுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்ல அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டுவருகின்றன.

இதற்காக, காஸா கடலோரப் பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்குமாறு அமெரிக்க ராணுவத்துக்கு அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன் கடந்த வாரம் உத்தரவிட்டார்.

இந்தச் சூழலில், பிரபல அமெரிக்க சமையல் கலை வல்லுநர் ஜோஸ் ஆண்டர்ஸின் “வேர்ல்டு ஃபுட் கிச்சன்’ (டபிள்யுசிகே) அறக்கட்டளையால் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருள்களுடன், ஸ்பெயின் நாட்டின் “ஓப்பன் ஆர்ம்ஸ்’ சேவை அமைப்புக்குச் சொந்தமான கப்பல் காஸாவை நோக்கி செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.

அந்தப் பகுதி மக்களுக்காக 200 டன் தானிய மாவுப் பொருள்கள், அரசி, புரத உணவுகள், குடிநீர், மருந்துப் பொருள்கள் ஏற்றப்பட்ட சரக்குக் கலத்தை இழுத்துக்கொண்டு, ஐரோப்பிய நாடான சைப்ரஸின் லார்னாகா துறைமுகத்திலிருந்து அந்தக் கப்பல் புறப்பட்டது.

அந்தத் துறைமுகத்திலிருந்து காஸாவுக்கு கடல்வழியாகச் செல்ல 15 மணி நேரம் ஆகும். ஆனால், சரக்குக் கலத்துடன் அந்தக் கப்பல் மணிக்கு 3.7 நாட் வேகத்தில் மட்டுமே செல்வதால் அது காஸா வந்துசேர மேலும் 2 நாள்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. காஸாவின் எந்தப் பகுதிக்கு அந்தக் கப்பல் கொண்டுவரப்படும் என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

காஸா மக்களின் உடனடி உணவுத் தேவையின் அவசியத்தை உணர்ந்த ஐரோப்பிய ஆணையம் அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ள வழித்தடத்தில் டபிள்யுசிகே அறக்கட்டளை கப்பல் நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்கிறது. கடந்த 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவிலிருந்து காஸாவுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்ல ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது இதுவே முதல்முறையாகும்.

இந்தத் திட்டத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் மிகப் பெரிய நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளது. “இஸ்ரேல் ராணுவத்தின் அனுமதியுடன்’: வடக்கு காஸா பகுதியில் கப்பல் நிறுத்துமிடம் ஒன்றை தாங்கள் உருவாக்கிவருவதாகவும், இதற்கான கட்டுமானப் பணியில் அங்கு இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளைப் பயன்படுத்திவருவதாகவும் டபிள்யுசிகே அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்துடன் அனுமதி பெற்று, மற்ற தொண்டு அமைப்புகளுடன் இணைந்து இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

காஸா பகுதி ஆட்சியாளர்களான காஸா அமைப்பினர், இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7}ஆம் தேதி நுழைந்து சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர். அதையடுத்து அந்த அமைப்பை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக தாக்குதல் நடத்திவருகிறது.

மேலும், அந்தப் பகுதிக்குள் அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டுசெல்லவிடாமல் இஸ்ரேல் முற்றுகையிட்டது. இதனால் காஸா பகுதியில் உணவுப் பொருள்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் காஸாவில் ஏரளமானவர்கள் பட்டினியால் உயிரிழப்பார்கள் என்று ஐ.நா.வும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் எச்சரித்துவருகின்றன.

இந்தச் சூழலில், உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களுடன் காஸாவை நோக்கி கடல்வழியாக ஒரு கப்பல் முதல்முறையாக தற்போது புறப்பட்டுள்ளது.

புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தின்போதும் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 67 பேர் உயிரிழந்தனர். இது குறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ரமாலான் மாதம் தொடங்குவதையொட்டி பாலஸ்தீனர்கள் திங்கள்கிழமை முதல் தங்களது நோன்பைத் தொடங்கினர். ஆனால், அந்த நாளிலும் காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 67 பேர் உயிரிழந்தனர்.

Leave a comment

Type and hit enter