அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் – அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

ஆப்கானிஸ்தானில் இன்று (19) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது.
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.05 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3-ஆக பதிவாகியுள்ளது.
அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் வீட்டில் இருந்த மக்கள் தெருவில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் நேற்று மாலை 8 மணியளவில் ஆப்கானிஸ்தான் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. அடுத்தடுத்து ஆப்கானிஸ்தான் பகுதியில் நலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
கடந்தாண்டு முழுவதும் உலகின் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால், சில உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளதுடன், மற்ற நாடுகளும் பீதியடைந்தன. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் மறக்க முடியாத சோகமான நினைவுகளை விட்டுச்சென்றது.
மேலும், 2024ஆம் ஆண்டு முதல் நாளிலேயே, ஜப்பான் மத்திய பகுதியில் 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஜனவரி 11 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் பகுதியில் 6.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுகத்தில் 2000 த்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்த நிலநடுக்கத்தில் ஆப்கானிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து மீண்டு வர 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என ஐக்கிய நாடுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.